சீகா வைரஸ் காய்ச்சல், இதுவரை இலங்கையில் எவருக்கும் தொற்றவில்லை என்று தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பீ.ஜி.மஹிபால ஹேரத், சிலாபம் – நல்லரசன்கட்டு பகுதியில் உயிரிழந்த இரு மூதாட்டிகளும், ஒருவகை வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளனர் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார்.
சுகாதாரக் கல்விப் பணிமனையில், நேற்றுத் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ‘வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர்களாலேயே, நாட்டுக்குள் சீகா வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளது. சிலாபத்தில் உயிரிழந்தவர்கள் சீகா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, அவர்கள் யாத்திரைக்கென இந்தியாவின் புதுடெல்லிக்குச் சென்றிருந்தபோது, வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளனர்’ என்றும் கூறினார்.
‘கடந்த ஓகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், இன்புளுவன்சா ‘ஏ’ வைரஸ் காய்ச்சலானது, நாட்டில் 3 பேருக்கு ஏற்பட்டுள்ளதுடன், இன்புளுவன்சா ‘பீ’ வைரஸ் காய்ச்சலினால் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றும் அவர் கூறினார்.
‘சீகா வைரஸ் காய்ச்சலானது, 2007ஆம் ஆண்டில், மேற்கு பசுபிக் நாடுகளில் பரவியது. ஆனால், எமது நாட்டில் இந்நோயாளர்கள் இன்னமும் இனங்காணப்படவில்லை. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, பிரேஸில் போன்ற நாடுகளிலும் தென்னமெரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருவோர் தொடர்பில், அவதானமாக இருக்க வேண்டும். இது குறித்து விமான நிலையங்களிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு, காய்ச்சல் போன்ற இந்நோய்கான அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக வைத்தியர்களிடம் செல்ல வேண்டும்’ எனவும் வலியுறுத்தினார்.
‘இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு காய்ச்சல் நீடிக்குமாயின், அண்மையிலுள்ள வைத்தியசாலைக்கு உடனடியாகச் சென்று சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளவும். காய்ச்சல், தோலில் செந்நிறத்திலான ஒவ்வாமை, கண் சிவந்து அலர்ச்சியேற்படுதல், தசை மற்றும் மூட்டுவலி, உடல் அசதி, தலைவலி என்பன இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.
டெங்கு நோயைப் பரப்புகின்ற நுளம்புகளைப் போன்று, ஏடிஸ் இஜிப்ரி எனும் நுளம்பு வகையே, இந்த சீகா வைரஸையும் பரப்புகின்றன. இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதியிலிருந்து, ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதிவரையில், நாடளாவிய ரீதியில், நுளம்பு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது’ எனவும் அவர் மேலும் கூறினார்.