5-20 சதவீதமானவர்கள் உயிரிழப்பு
240,170 பேர் கலைத்துக்கொள்கின்றனர்
ஊவாவிலேயே அதிகமான கருக்கலைப்பு
கவிதா சுப்ரமணியம் –
திருமணம் முடிக்காமலே, நாளொன்றுக்கு 1,000 பேர் சட்டவிரோதமான முறையில் கருவைக் கலைத்துக்கொள்கின்றனர் என்று ஜயவர்தனபுர பல்கலைக்கழக பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர் ஷாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
‘133 வருடங்களுக்கு முன்னரான சட்டத்தை, இன்னும் நாம் கடைப்பிடித்து வருகின்றோம். அச்சட்டத்தில், கர்ப்பம் தரித்த தாயொருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மாத்திரமே கருக்;கலைப்புச் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறினார்.
கருக்கலைப்பினால் ஏற்படும் சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்பில் உள்ள சுகாதார கல்விப் பணியகத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (09) இடம்பெற்றது.
அதில், கலந்துகொண்டதன் பின்னர், தமிழ்மிரருக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நாளொன்றுக்கு 700-1,000க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் கருக்கலைப்புகள் இடம்பெற்றுகின்றன. திருமணமாகாத, சிறுவயது பெண்களே இவ்வாறு செய்துகொள்கின்றனர்.
கருக்கலைப்பினால், நாளொன்றுக்கு 15-20 இடைப்பட்ட சதவீதமானோர் உயிரிழக்கின்றனர். நாடளாவிய ரீதியில் 1,000க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையங்கள் உள்ளன.
‘கருக்கலைப்புக்கான மருந்துகளுக்கு இலங்கையில் அனுமதி இல்லை என்றாலும், சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளிலிருந்து அந்த மருந்துகளை, சில மருந்தகங்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றன’ என்று அவர் தெரிவித்தார்.
‘ஒரு பெண் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கர்ப்பம் தரித்தால், அவருடைய எதிர்காலத்தை கருத்திற் கொண்டு, அவருடைய கருவைக் கலைப்பதற்கு அநேகமான வைத்தியர்கள் முன்வருகின்றனர். எனினும், அதற்குப் பின்னர் சுகாதார நடைமுறைகளைப் பேணாமையினால், பல்வேறான நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகிவிடுகின்றனர்.
‘சராசரியாக வருடத்துக்கு 240,170 பேர் சட்டவிரோதமாகக் கருவைக் கலைத்து கொள்கின்றனர். அந்த எண்ணிக்கை, கடந்தவருடம் 150,000 ஆக இருந்தது. 2010ஆம் ஆண்டு 6.5 சதவீதமான பருவவயதுப் பெண்கள் சட்டவிரோத கருக்கலைத்து கொண்டுள்ளனர்.
2011ஆம் ஆண்டு ஊவா மாகாணத்தில் மாத்திரம் 1.3 சதவீதமானவர்கள் கருவைக்கலைத்துக் கொண்டனர். அம்மாகாணத்திலேயே அதிகமான கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது.
சிறுவர் மற்றும் மகளிர் விவகார பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் இ.ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில்,
‘சட்டவிரோதக் கருக்கலைப்பு பற்றி, 2010ஆம் ஆண்டு 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. எனினும், முறையாக முறைப்பாடுகள் செய்தால் மாத்திரமே பொலிஸாரினால்
நடவடிக்கை எடுக்க முடியும். சட்டவிரோதமான கருக்கலைப்பு நிலையங்களில் ஒரு கருக்கலைப்புக்கு, 38ஆயிரம் ரூபாய் அறவிடப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.