நேபாளத்தின் கடைசி மன்னரான ஞானேந்திர ஷா கடந்த 10 ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தவில்லை என மின்ஆணையம் தெரிவித்துள்ளது.
மன்னராட்சி நடந்து வந்த நேபாளத்தில், மாவோயிஸ்டுகள் தலைமையில் நடந்த பெரும் போராட்டத்தின் விளைவாக அங்கு மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, ஜனநாயக அரசு பொறுப்பேற்றுள்ளது. மன்னராட்சி முடிவுக்கு வந்ததாக பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து மன்னராக இருந்த ஞானேந்திர ஷா, காத்மாண்டுவில் உள்ள நாராயண் ஹித்தி அரண்மனையை காலி செய்து வெளியேறினார். பின்னர் அரச சொத்தான நாகார்ஜுன அரண்மனையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் அந்த அரண்மனையில் குடியேறிய நாள் முதல் இதுவரையில் அங்கு பயன்படுத்திய மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தவில்லை என நேபாள மின் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எந்த கடிதம் அனுப்பினாலும் அரண்மனை அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அவர் இலங்கை மதிப்பில் 1 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளதாகவும் மின் ஆணைய உதவி இயக்குனர் தெரிவித்தார்.