நூறு நாள் வேலைத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் குறைப்பு, ஜனநாயக நல்லாட்சி உருவாக்கம், திருட்டுக்கள், ஊழல் ஒழிப்பு ஆகிய மூன்று அடிப்படை காரணங்களும் வெற்றிகரமாகி மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது.
கொள்கை திட்டமிடல் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பது அரசின் நோக்கமாகும். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கி வாழ்க்கைச் செலவைக் குறைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இடைக்கால வரவு செலவு மூலம் பொருள் விலை குறைப்பு, சம்பள அதிகரிப்பு, வருமான அதிகரிப்புக்கு அரசு நடவடிக்கை எடுத்தது.
ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல். புதிய அரசமைப்பு, ஜனாதிபதியின் பதவிக் காலம் குறைப்பு, தகவல் அறியும் சட்டம் சமர்ப்பிப்பு, சுயாதீன அரச சேவைகள் ஆணைக்குழு.
தேசிய கணக்காய்வுக் குழு, தேசிய கொள்வனவு ஆணைக்குழு, சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, ஆகியவற்றின் ஸ்தாபிதம் போன்ற யோசனைகளில் மக்களின் சுதந்திரமும் ஜனநாயக உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. மாபெரும் அபிவிருத்தி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய லஞ்சம். ஊழல் மோசடிகளைக் குறுகிய காலத்தில் அரசு முறியடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவின் பணிகள் வினைத் திறனுடன் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களின் நிதியை மோசடி செய்தவர் களிடம் இருந்து அவற்றை அறவிட நடவடிக்கை எடுத்துள்ளோம். சட்ட ரீதியாக அந்த நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்படும்.
இலஞ்ச, ஊழல் புலனாய்வு ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகள் துரிதமாக விசாரிக்கப்படுகின்றன. நிதிப் புலனாய்வுப் பிரிவும், பொலிஸ¤ம் இந்த மோசடி நபர்களுக்கு எதிராக தனித்தனியாக விசாரணை நடத்துகின்றன.
விசாரணையில் வெளிவரும் விடயங்கள் சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் சுயாதீன நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடரும் நடவடிக்கைகளும் விரைவில் மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு நாட்டு மக்களுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் பெருமளவு பொருளாதார நிவாரணங்களும் சுதந்திரமும் கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் ஹர்ஷா டீ சில்வா தொடர்ந்து தெரிவித் துள்ளார்.