“நீ இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகப் போகிறாய் இவான்ஸ்” என்று மருத்துவர் சொன்ன போது இவான்சும் அவரது கணவர் மைக் ஹவுல்ஸ்டனும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தனர். ஆனால், கரு வளரத் தொடங்கிய சில நாட்களுக்கு பிறகு அதே மருத்துவரிடமிருந்து இதயத்தை பிளக்கும் செய்தி ஒன்று வந்தது.
இறுகிய முகத்துடன், ”’அனன்சிபலி’ எனப்படும் மூளையின் முக்கிய பகுதிகளை அழிக்கும் அரிய நோயால் உன் வயிற்றில் வளரும் சிசு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் கண்ட சிசு வயிற்றிலேயே இறந்து விடும். ஒரு வேளை அது உயிர் பிழைத்தாலும், பிறந்த சில நிமிடங்கள் மட்டும் தன் உயிர் வாழும்” என்றார்.
‘தங்கள் வீரமான மகன் நிச்சயம் இந்த உலகிற்கு வருவான், கருப்பையிலேயே இறந்து விட மாட்டான்’ என்று உறுதியாக நம்பிய இவான்ஸ் தம்பதியினர் பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கு டெட்டி, நோவா என்று பெயர்களைக் கூட முடிவு செய்து வைத்தனர். பிறக்கும் தன் குழந்தையின் வாழ்க்கை சில நிமிட வேதனையில் முடிந்து போய் விடக் கூடாது என்று முடிவு செய்த மைக், தனது குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தார்.
பிரசவ வலி கண்ட இவான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்தார். தன் சகோதரன் டெட்டி இறக்கப் போவது தெரிந்தோ என்னவோ, நோவா சத்தமாக அழுது கொண்டே இருந்தான். மருத்துவர்கள் டெட்டியை முழுவதுமாக பரிசோதனை செய்தனர். பிரசவம் நடந்த 100-வது நிமிடத்தில் அந்த துயர கணம் வந்தது. டெட்டி இறந்து விட்டான். மூன்றே நிமிடத்தில் அறுவை சிகிச்சை தொடங்கியது.
மாலை 6.30 மணிக்கு அகற்றப்பட்ட டெட்டியின் சிறுநீரகங்கள் 375 கிலோ மீட்டர் பயணித்து காலை 8 மணிக்கு ஒரு மரணத் தருவாயில் இருக்கும் வாலிபர் ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
டெட்டி தான் இங்கிலாந்தின் மிகவும் இளைய உடலுறுப்பு கொடையாளி(organ donor). இன்று உயிரோடு இருந்திருந்தால் தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பான். அவனது உடன் பிறப்பான நோவா தற்போது அவனது அக்காவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். டெட்டியால் உயிர்பிழைத்த அந்த வாலிபர் அந்த குடும்பத்திற்கு கடிதம் எழுதுகிறார்.
2014, ஏப்ரல் 22-ல் இந்த உலகுக்கு வந்த டெட்டி, அவன் அப்பா சொல்வதைப் போல “அவன் ஹீரோவாக வாழ்ந்தான். ஹீரோவாகவே இறந்தான்.”