Breaking
Thu. Jan 16th, 2025

ஜப்பானில் உள்ள மட்சுயாமா நகரில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி, பெண்கள் ப்ரீ ஸ்டைல் பிரிவுக்கான 1500 மீட்டர் பின்புற நீச்சல் போட்டியில் 100 வயதான மீக்கோ நகோகா உலக சாதனை படைத்தார்.

100 முதல் 104 வயதுக்குரியவர்களுக்கான ப்ரீ ஸ்டைல் போட்டியில் இவர் மட்டுமே கலந்து கொண்டபோதிலும், 1500 மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம், 15 நிமிடம் மற்றும் 54 விநாடிகளில் பின்புறமாக நீச்சலடித்து உலக சாதனை படைத்துள்ளதாக ஜப்பான் மாஸ்டர்ஸ் நீச்சல் சங்கம் தெரிவித்துள்ளது. அவரது சாதனையை கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தனைக்கும் மீக்கோ தொழில்முறை நீச்சல் வீராங்கனை அல்ல. 1914 ஆம் ஆண்டு பிறந்தவரான மீக்கோவுக்கு 80 வயதை தாண்டும் வரை நீச்சல் என்னால் என்னவென்றே தெரியாது. அவரது முழங்காலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 82 வயதில் நீச்சல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். நீச்சல் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்ட அவர், 2002 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள கிரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் முதல் முறையாக பங்கேற்றார்.

அங்கு முதன் முறையாக தான் கலந்துகொண்ட 50 மீ பின்புற நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று மீக்கோ சாதனை படைத்தார். அதன் பின் 2004 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற 50 மீ, 100 மீ மற்றும் 200 மீ பின்புற நீச்சல் போட்டிகளில் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

தனது 90 வயதை எட்டியபோது அவருக்கு ஜப்பான் நாட்டின் தேசிய நீச்சல் வீராங்கனை என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதன் பின் நடைபெற்ற 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பின்புற நீச்சல் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்தார். இதை தொடர்ந்து பயிற்சியாளரை வைத்துக்கொண்டு தொடர் பயிற்சிகளை மீக்கோ மேற்கொண்டு வந்தார்.

அதன் பின் நடைபெற்ற 50 மீ பின்புற நீச்சல் போட்டியில் உலக சாதனை படைத்ததுடன், நீச்சல் போட்டியில் இதுவரை 24 உலக சாதனைகளை மீக்கோ படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post