இந்த முறைப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 115க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்ளும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு 55 ஆசனங்கள் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் நாடுபூராகவும் உள்ள விகாரைகளுக்கு சென்று வாக்கு சேர்க்க முயற்சிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் உள்ள ஐ.தே.க.வின் தலைமையகத்தில் இன்றுகாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த தேர்தல்களின் போது மஹிந்த ராபக்ஷவின் அரசாங்கம் பெற்றுக் கொண்ட வாக்குகளில் 40 வீதத்தை தற்பொழுது அவர்கள் இழந்துள்ளதாகவும் அவை இந்த முறை ஐ.தே.க. வுக்கு கிடைக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ச அன்றும் தோல்வியடைந்தார், அதேபோல் நாளையும் தோல்வியடைவார் என்பது கசப்பான உண்மையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு சுமார் 16000 பேர் விண்ணப்பித்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கெதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.