Breaking
Mon. Dec 23rd, 2024
– காதர் முனவ்வர் –
 
முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளும் நலன்களும் கருத்தில் எடுக்கப்படாத எந்தத் தீர்வு முயற்சிகளும் நடைமுறைச் சாத்தியமற்றதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பில் முஸ்லிம் புத்திஜீவிகள்,அரசியல் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது-
சுமார் மூன்று தசாப்தகாலமாக இந்த நாட்டை ஆட்டிப்படைத்த யுத்தத்தின் கோரப்பிடிக்குள் தமிழ் மக்கள் மட்டும் சிக்கித் தவிக்கவில்லை, வடக்கு, கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் சமூகமும் இந்த யுத்தத்தினால் அதேயளவு பாதிப்பையும், துன்பத்தையும் சந்தித்தது.
உயிர்களை காவுகொடுத்தோம், உடமைகளை இழந்தோம் எல்லாவற்றிற்கும் மேலாக வடபுல முஸ்லிம்கள் தமது சொந்த தாயகத்திலிருந்து உடுத்த உடையுடன் விரட்டப்பட்டனர். தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி கூப்பாடுபோடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இவ்விரண்டு இனங்களின் சமூக ஒற்றமைக்கு காத்திரமான எந்த பணிகளையும் ஆற்றவில்லை. மேடைகளிலும், அறிக்கைகளிலும் பிட்டும் தேங்காய்ப்பூவும்போல என்று முழக்கமிடுவார்கள். ஆனால், நடைமுறைவாழ்வில் அவர்கள் அந்த நல்லெண்ணத்தை என்றுமே வெளிப்படுத்தியதில்லை. சமாதான காலத்தில் முஸ்லிம்கள் மீளக்குடியேற சென்றபோது எம்மை மறைமுகமாக விரட்டியடித்தார்கள்.
போர் முடிந்து அமைதியான சூழல் ஏற்பட்ட பின்னர் முஸ்லிம்கள் தமது பிரதேசத்தில் மீள்குடியேற சென்றபோது அவர்கள் பல்வேறு தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் போடுகிறார்கள். தமிழ் கூட்டமைப்பின் அடிமட்ட உறுப்பினர்களில் பெரும்பாலனோரும் உயர்மட்ட ஒரு சில உறுப்பினர்களும் அப்பாவி தமிழ் மக்களை தூண்டிவிட்டு எம்மை மீள்குடியேற விடாமல் தடைபண்ணுகிறார்கள். எமது சொந்தக் காணியில் 25 வருடங்களாக வளர்ந்துள்ள காடுகளை நாம் வெட்டி துப்பரவாக்கும் பணியில் ஈடுபடுகின்றபோது அதனை ஆக்கிரமிப்பென்றும் அத்துமீறல் என்றும் வெளியுலகத்திற்கு 
கூறித்திரிகிறார்கள்.
தங்களுக்கு வசதியான தனியார் ஊடகங்களை வரவழைத்து மக்களை தயார்படுத்தி பேட்டிகளையும், கருத்துக்களையும் வழங்கி எம்மை அனியாயக்கார்ர்களாக காட்ட முயல்கின்றனர். ஜெனிவாவிலோ அல்லது சர்வதேச நாடுகளிலோ முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினைகள் உண்டு அவற்றை தீர்த்து வைக்க வேண்டும் என்று அவர்கள் என்றுமே சுட்டிக்காட்டியதில்லை.
திம்பு பேச்சுவார்த்தையிலும் சரி இலங்கை இந்திய ஒப்பந்தத்திலும் சரி முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் கருத்தில் எடுக்கப்படவில்லை. கடந்த காலங்களில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் வெளிநாடுகளில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதெல்லாம் முஸ்லிம் சமூகம் மூன்றாம் தரப்பாக- சமதரப்பாக – தனித்தரப்பாக பங்குபற்ற வேண்டும் என்று அந்த சமூகத்தின் தலைவர்கள் குரல் எழுப்பியபோதெல்லாம் புலிகளும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளும் அதற்கு தடைபோட்டதே வரலாறு.
சுமார் இரண்டரை வருட காலம் வடமாகாண சபையை ஆட்சி செய்து வரும் தமிழ் கூட்டமைப்பு தமது சகோதர இனம் தென்னிலங்கை அகதி முகாம்களில் இன்னும் அவல வாழ்வு வாழ்வது பற்றி எந்த கரிசனையும் கொள்ளவில்லை. அவர்கள் தமது தாயகத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள் என்று ஒரு வார்த்தைதானும் பேசவில்லை. 
மாறாக புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வந்து  பரீட்சை எழுதுகின்றார்கள், வடக்கிற்கு வந்து தொழில் செய்கின்றார்கள் என்று ஓலமிடும் மாகாண சபை உறுப்பினர்களையே நாம் காண்கின்றோம். மஹிந்தவின் ஆட்சி முடிவிற்கு கொண்டுவரப்பட்டு மைத்திரி – ரணிலின் புதிய ஆட்சி உருவாக்கத்திற்கு எமது முஸ்லிம் மக்கள் ஆற்றிய பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவராகிய நான் உயிரையும் துச்சமாக மதித்து அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது மஹிந்த அரசிலிருந்து வெளியேறினேன். எனது பாதுகாப்புக்கள் உடனடியாக குறைக்கப்பட்டிருந்த நிலையிலும் நாடளாவிய ரீதியில் இரவு பகலாக பிரச்சாரங்களில் ஈடுபட்டேன். எனினும் புதிய ஆட்சி மலர்வதற்கு முஸ்லிம்கள் பங்களிப்பை வழங்கவில்லை என்ற பாணியில் சிலரின் கருத்துக்கள் அமைந்துள்ளன.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாம் அறிவோம் ஏனென்றால் அவர்களுடன் நாம் ஒன்றித்து வாழ்ந்தவர்கள் இப்போதும் வாழத்துடிக்கின்றவர்கள் சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் இலங்கைக்கு வரும்போதெல்லாம் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் எமக்கு கிட்டும்போது முஸ்லிம்களின் பிரச்சினைகளுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் நான் எடுத்துரைப்பது வழக்கம்.அன்மையில் கூட அமெரிக்க உயர் ராஜதந்திரி சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் செய்த போது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை மட்டும் நாம் இடித்துரைக்கவில்லை கடந்த காலங்களில் எமது தமிழ் சமூகம் பட்ட அவஸ்தைகளையும் இன்னல்களையும் தெளிவாக விளக்கினோம், அத்துடன் இன்ப்பிரச்சினைக்கு துரித தீர்வு காணப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.
நாங்கள் மனம்திறந்துதான் இவைகளை சமந்தா பவருடன் பேசினோம் என்பதை உங்களுக்கு கூறிவைக்க விரும்பிகின்றேன்.
நுனி நாக்கில் ஒன்றும் அடிநாக்கில் ஒன்றும் வைத்து நாம் என்றுமே பேசியதில்லை. ஆனால், தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இலங்கையிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் அவர்களுக்கும் இன்னோரன்ன பிரச்சினைகள் உண்டு என்று எப்போதாவது இடித்துரைத்துள்ளனரா? இதய சுத்தியுடன் அவர்கள் எமது பிரச்சினைகளை என்றுமே தொட்டுக்காட்டியதில்லை. சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என நான் உட்பட முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றோம். நான் இதனை இரட்டை நாக்குடன் பேசுவதில்லை. முள்ளிவாய்க்காலில் கடும் யுத்தம் நடைபெற்றபோது உயிருக்கு தப்பி பிழைத்து ஓடிவந்த தமிழ் மக்களை ஓமந்தை சென்று வரவழைத்து அவர்களை வவுனியாவிலும் மன்னாரிலும் தங்க வைத்தேன். அவர்களுக்கு முடிந்தளவு வசதிகளை செய்து கொடுத்தேன். மீள்குடியேற்ற அமைச்சராக நான் இருந்த காலத்தில் தமிழ் அகதிகளுக்கு என்னால் முடிந்தவரை உதவியளித்துள்ளேன். புலிகளால் 1990ம் ஆண்டு விரட்டப்பட்ட முஸ்லிம் அகதிகளில் நானும் ஒருவன் நடு நிசியிலே கடல் மார்க்கமாகவும் தரைமார்க்கமாகவும் எமது மக்கள் வந்த கஷ்டங்களை நாங்கள் உணர்வோம் எனவே எமது சகோதர தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது அந்த அவஸ்த்தையை நாங்கள் உணர்ந்தோம் இப்போதும் உணர்கின்றோம்.
முஸ்லிம்கள் வெளியேறி தென்னிலங்கை வந்தபோது இங்குள்ள முஸ்லிம்கள் எமக்கு பல்வேறு உதவிகளை செய்து எம்மை வாழ வைத்தார்கள். அதேபோன்று நாம் சொந்த பிரதேசத்தில் மீள்குடியேறுவதற்கு தென்னிலங்கை முஸ்லிம்களின் ஒத்துழைப்பும் உத்வேகமும் எமக்கு தர வேண்டும் என நாம் கோரிக்கைவிடுகின்றோம்.

By

Related Post