Breaking
Mon. Dec 23rd, 2024

– அபூ அஸ்ஜத் –

“தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றினை விட நான் அம்மக்கள் மீது கொண்டுள்ள பற்று பன்மடங்கானது. மார்க்கத்தால் இஸ்லாமியனாக இருந்த போதும், எனது பதவியினை கொண்டு சகல மக்களுக்கும் பணியாற்றிவருகின்றேன்”. என்று தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன், இந்த சபையில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இனவாத கருத்துக்களை கூறிவருகின்றனர். அதனை பேசுவதற்கு முன்னர் புத்திசாதுாரியமாக அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மீது அமைச்சர் றிஷாத் பதியுதீன் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

நான் இந்த சபையில் இல்லாதபோது இந்த சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசிய விடயம் தொடர்பாக நான் சில கருத்துக்களை கூற வேண்டும்.

கடந்த யுத்தத்தில் இடம் பெயர்ந்த எமது தமிழ் சகோதரர்களை பராமரித்து அந்த 3 இலட்சம் பேரை அவர்களது மண்ணில் குடியமர்த்தினேன். அது மட்டுமல்லாது வடக்கில் மடு, மாந்தை, வவுனியா தமிழ் பிரதேசம், மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை, பாதைகள் உள்ளிட்ட இன்னும் எத்தனையோ பணிகளை செய்துள்ளேன். அதனை மக்கள் நன்கு அறிவார்கள். இன்று இந்த மக்கள் குறித்து கவலைப்படுவதாக கூறுபவர்கள் எதனை செய்துள்ளார்கள் என கேட்கவிரும்புகின்றேன்.

வடக்குக்கு எதனையும் செய்வதில்லை என்று தெரிவிக்கும் இந்த புதிய பாராளுமன்ற உறுப்பினர், இந்த வரவு செலவு திட்டத்தில் வடக்கு விவசாயிகளின் உற்பத்தி செய்யும் ஒரு பிரதான வர்த்தக மத்திய நிலையமொன்றினை வவுனியாவில் அமைக்கவென பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மத்திய நிலையம் இங்கு இயங்குகின்றபோது தம்புள்ளைக்கு எமது உற்பத்திகள் செல்வது மட்டுப்படுத்தப்படும். இந்த நிலையத்தினை இங்கு கொண்டுவருவது தொடர்பில் வடமாகாண அமைச்சர்களாக டெனீஸ்வரன் உள்ளிட்ட இன்னுமொரு அமைச்சரும் வேண்டுகோள் ஒன்றினையும் முன்வைத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார்.

அதேவேளை, பொருளாதார அபிவிருத்தி வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் ஒரு முன்னேற்றகரமான வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சரான ரவி கருணாநாயக்க அவர்கள் இச் சபையில் சமர்ப்பித்தமையை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

தேசிய அபிவிருத்தி மற்றும் பொருளாதார சீர்த்திருத்தங்களை நோக்காகக் கொண்ட இந்த வரவு செலவுத் திட்டம் பிரதம மந்திரி அவர்களின் பொருளாதார கொள்கையை செயல்படுத்துவதற்கு தளம் அமைக்கும் ஒரு வரவு செலவுத்திட்டமாக அமைந்துள்ளது.

2016ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனைகளும், பொருளாதார கொள்கைகளும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினதும், பிரமத மந்திரி அவர்களினதும் சந்தைப்படுத்தலை நோக்கமாகக் கொண்ட பொருளாதார கொள்கைக்கு அமைவாக அமைந்துள்ளதுடன், நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் தனியார் துறையினரின் பாரிய பங்களிப்பை அளிக்கக் கூடியதாகவும், அதே சமயம் சமூகத்துக்கு பொறுப்புக் கூறுவதாகவும் அமைந்துள்ளது.

வரவு செலவுத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள சீர்த்திருத்தங்கள் இலங்கை வரலாற்றில் 3வது பரம்பரையில் பொருளாதார சீரத்திருத்தங்களாக அமைந்துள்ளதுடன், பல்வேறுப்பட்ட பொருளாதார பொறிமுறைகளுகளையும் வர்த்தக மேம்பாட்டையும் அடித்தளமாகக் கொண்டதாக அமைந்துள்ளன.

மிகவும் போட்டியானதும், சமூக சந்தைப்படுத்தல் பொருளாதாரத்தை ஆதாரமாகக் கொண்டதுமான ஒரு தெளிவான நீண்டகால பொருளாதார கொள்கை இலங்கைக்கு தேவையென கௌரவ பிரதம மந்திரி அவர்கள் வெளிப்படுத்திய கொள்கையை நான் வரவேற்பதுடன், எமது வெளிநாட்டு ஏற்றுமதிகள் பரந்தளவில் உலகச் சந்தையில் சென்றடைதல் வேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!
கைத்தொழில் அமைச்சர் என்ற ரீதியில் எங்களது கைத்தொழில்கள் உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒருபங்காக இருப்பதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 60 வீதம் சேவைகள் துறையிலிருந்து பங்களிப்புச் செய்யப்படுகின்றது.

எங்களது கைத்தொழில், உற்பத்தித்துறை கைத்தொழிலாக அமைந்துள்ளதுடன், சுரங்கந் தோன்டுதல் மின்சார உற்பத்தி, எரிவாயு உற்பத்தி அல்லது நீர்வழங்கல் ஆகியனவைகளை சார்ந்தனவாக அமையவில்லை.

உண்மையில் எமது கைத்தொழில்களின் 99 வீதம் உற்பத்தி சார்ந்த கைத்தொழில்களாக உள்ளன.
இலங்கையின் உற்பத்தித்துறை பல்வேறு துறைகள் சார்ந்ததாக அமைந்துள்ளதுடன், சில உற்பத்தித்துறைகள் உலக தரத்திற்கு ஈடானதாக செயற்பட்டுவருகின்றன. எங்களது ஆடை உற்பத்தித் துறை உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளதுடன், எங்களின் இறப்பர் உற்பத்திகள் பொதியிடல் எழுதுகருவி வகைகள் மற்றும் அச்சுசார்ந்த பொருட்களுக்கு உலகச் சந்தையில் பலத்த கேள்வி நிலவிருகின்றது.

இலங்கை ஆசியாவில் ஒரு வலுவுள்ள பொருளாதார நாடாக மாறுவதற்கு கைத்தொழில் அபிவிருத்தி மிகவும் அத்தியவசியமானதாகும்.

எமது அரசாங்கம் 45 பொருளாதார அபிவிருத்தி வலயங்களை நாடு பூராவும் ஸ்தாபித்து 200க்கும் மேற்பட்ட கைத்தொழில்சாலைகளை நிருவுவதற்கு உத்தேசித்துள்ளது.

கிராமங்களை அபிவிருத்தி செய்யும் பொருட்டு 2500 கொத்தனிக் கிராமங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. 5000 முதலீட்டாளர்களை கவரும் பொருட்ட நாடு பூராகவும் 44 கைத்தொழில் வலயங்கள் தாபிக்கப்படுவதுடன், 10 லட்சம் தொழில்வாய்ப்புகளை ஏற்ப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொருட்களை உற்பத்தி செய்வதற்கு விசேடமாக திருகோணமலை, வன்னி மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மொனறாகல, புத்தளம், யாழ்ப்பாணம், வன்னி மற்றும் அம்பாறை பிரதேசங்களில் சிறிய கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற் பேட்டையில் தனியார் துறையினர் ஈடுபட்டு முதலீடுகளை செய்வதுடன், உற்பத்தியாக்கம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகாலங்களுக்கு 50 வீத வரி விலக்களிப்பதற்கும், உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு பூராகவும் இயங்கிக்கொண்டிருக்கும் 37 கைத்தொழில் பேட்டைகளில் வீதிகள், நீர் வடிகான்கள் 24 மணித்தியால பாதுகப்பு உட்பட உள்ளகக் கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கான தேவையும் தற்போது எழுந்துள்ளது. இத்தொழிற் பேட்டைகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்திய பின்பு இங்கு அமைந்துள்ள கைத்தொழிற்சாலை திறம்பட இயங்குவதற்கு நவீன தொழில்நுட்ப முறைகளையும் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. கொழும்பு ஒரு கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் நிதி சேவைகளின் மத்திய நிலையமாக மாற்றமடையும்.

கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கைத்தொழில்களின் மத்திய நிலையங்களாக மாற்றுவதற்கு இனங்காணப்பட்டுள்ளன.

இரத்தின கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி செய்வதற்கு ஒரு மத்திய நிலையமொன்று ஸ்தாபிக்கபடுவதுடன், அரிசி, இறப்பர், தேயிலை, தேங்காய், பழங்கள் மற்றும் பன்னைகள் வளர்ச்சிக்கு 23 விசேடமான விவசாய வலயங்கள் ஸ்தாபிக்கப்படும்.

விவசாயக் கைத்தொழில் அபிவிருத்திக்காக மகாவலி திட்டத்தில் 02 விசேட வலயங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. மகாவலி டீ வலயத்தில் 800 ஹெக்டயர் நிலத்திலும் மகாவலி யு வலயத்தில் 12,000 ஹெக்டயர் நிலத்திலும் இந்த இரு விசேட வலயங்களும் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
லொறிகள், பேரூந்துகள், மோட்டார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தி செய்வதற்கு புறம்பான உற்பத்தி அலகுகள் ஸ்தாபிக்கப்படுவதை கைத்தொழில் அமைச்சர் என்ற ரீதியில் நான் வரவேற்கின்றேன்.

கைத்தொழிலை முன்னேற்றுவதற்கான இந்த முயற்சிகள் நமது பொருளாதாரத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகின்றன. இத்துறை தொடர்பான முக்கிய அமைச்சான கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு இந்த முயற்சிகளுக்கும் பூரண ஆதரவை வழங்குவதற்கு தயாராக உள்ளது.

உற்பத்தி செலவினை குறைப்பதற்கு நாங்கள் கவனஞ ;செலுத்துதல் வேண்டும். உற்பத்திக்கான மின்சார செலவுகளை குறைப்பது மிகவும் அத்தியவசியமானது.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் மின்சக்தி உற்பத்திக்கு 20 வீத இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் மின்சக்திக்கான தேவை ஆண்டொன்றுக்கு 5 வீதம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

குறிப்பாக இந்த வரவு செலவுத் திட்டத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்,சிங்களவர்கள்,மற்றும் தமிழர்களின் மீளகுடியேற்றம் தொடர்பிலும்,அதற்கான நிதிகள் தொடர்பிலும் பேசப்படவில்லை.

ஜனாதிபதி ,பிரதமர்இமற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர் இது தொடர்பில் கவனம் செலுத்தி தெவையான நிதியினை ஒதுக்கீடு செய்வதுடன்,இரு வருடங்களுக்குள் இந்த மக்களது மீள்குடியேற்றங்கள் நிறைவுரும் வகையில் செயற்பாடுகளை அமைக்க வேண்டும் என இந்த சபையில் வேண்டுகோள்விடுக்கின்றேன்.என்றார்.

By

Related Post