அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் நாம் கைகோர்த்து 07 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் நமது ஊர்மக்களுக்காக கோடி ரூபாய் மதிப்புள்ள வாழ்வாதார உதவிகளை செய்தது மட்டுமல்லாமல், பலகோடி பெறுமதியான அபிவிருத்தித் திடங்களுக்கான முன்மொழிவுகளை எம்மிடமிருந்து கேட்டுப்பெற்று அதற்கான நிதிஒதுக்கீடுகளையும் செய்து தந்திருக்கின்றார் எனவும் அத்துடன் 02வது கட்டமாக சுமார் 1000 க்கும் அதிகமான தேவையுடைய மக்களுக்காக, வாழ்வாதார உதவிகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் மேற்கொள்ளப்படும் நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி திட்டங்களின் ஒரு பகுதியாக, பள்ளிவாசல் மற்றும் மையவாடிகளுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று, நிந்தவூர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாரை பிராந்திய காரியாலயத்தில் நேற்றுமுன் தினம் (03) இடம்பெற்றது.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, தவிசாளர் மேலும் கூறியதாவது,
எமது கடந்த 15 வருட கால அரசியலில் இவ்வாறான உதவிகளையும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் செய்ய முடியவில்லை, காரணம், அன்று நாம் இருந்த கட்சியின் தலைமைத்துவம் அதற்கு உவப்பானதாக இருந்திருக்கவில்லை.
எமது வேண்டுகோள்களுக்கிணங்க, நிந்தவூரை திட்டமிட்ட முறையில் பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்திப் பாதையில் நகர்த்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார். அதனடிப்படையிலேயே, பள்ளிவாசல், மைதானங்கள், பாடசாலைகள், பொதுவிளையாட்டு மைதானம், விளையாட்டு கழகங்கள், சிறுவர் பூங்கா மற்றும் பொது அமைப்புகள் உள்ளிட்டவற்றின் அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கான ஒதுக்கீடுகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் செய்துள்ளார் என்று தெரிவித்தார்.
இதன்போது, பள்ளிவாசல்களின் தலைவர்கள், செயலாளர்கள், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-எம்.ஏ.எம். முர்ஷித் –