பாரிய ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு 1595 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் 237 வழக்குகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2010ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் ஜனவரி மாதம் வரை அரச நிறுவனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக கிடைத்த முறைப்பாடுகளில் 1049 முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அதில் 237 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 689 முறைப்பாடுகள் ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 43 முறைப்பாடுகள் வேறு நிறுவனங்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 146 முறைப்பாடுகளில் ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் இன்னும் 62 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் செய்யப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.