இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 16,000 வழக்கறிஞர்களுக்கு விசேட எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருக்கும் இரு கேள்விகள் தொடர்பாக திறந்த நீதிமன்றத்திற்கு முறையீடுகளை தெரிவிப்பதற்காக அவர்களின் அபிப்பிராயத்தை பெற்றுக் கொள்வதற்காக இந்த எஸ்.எம்.எஸ். அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரண கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்த ஏற்பாடுகளின் கீழ் மூன்றாவது பதவிக் காலத்திற்கு போட்டியிடுவதற்கு ஏதாவது தடைகள் உள்ளனவா என்பது பற்றி உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடியுள்ளார்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற பதிவாளர் நேற்று முன்தினம் புதன்கிழமை சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். தனது கேள்விகள் தொடர்பாக இந்த மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னராக தீர்மானத்தை அறிவிக்குமாறு ஜனாதிபதி கேட்டிருந்தார்.
தனது இரண்டாவது பதவிக் காலத்தின் நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்த பின்னர் மூன்றாவது பதவிக் காலத்திற்கு போட்டியிட முடியுமா என்பது பற்றியதாக ஜனாதிபதியின் முதலாவது கேள்வி அமைந்திருப்பதாக அஜித் பத்திரண கூறியுள்ளார்.அத்துடன் பதவியிலிருக்கும் ஜனாதிபதி 18 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மூன்றாவது தடவை தெரிவு செய்யப்படுவதற்கு ஏதாவது தடை இருக்கின்றதா என்பது உயர்நீதிமன்றத்தின் கருத்தை நாடியிருப்பதான ஜனாதிபதியின் இரண்டாவது கேள்வியாகும்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் சகல உறுப்பினர்களும் இது தொடர்பாக அறிந்திருக்க வேண்டியிருப்பதாக சங்கச் செயலாளர் பத்திரண தெரிவித்துள்ளார்.(tk)