மியன்மார் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மியன்மார் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, இந்த இலங்கையர்களுக்கு எதிராக அந்த நாட்டின் குற்றவிசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மீள பெறப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன் பிரகாரம் அடுத்த சில தினங்களுக்குள் விடுதலையான இலங்கை மீனவர்கள் நாடு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கையின் பேரிலேயே, இந்த மீனவர்களை விடுதலை செய்வதற்கான பணிப்புரையை மியன்மார் ஜனாதிபதி விடுத்துள்ளார்.
மியன்மார் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மீனவர்கள் 17 பேரும் கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதமளவில் அந்த நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.