தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் 177 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
சட்ட விரோதமான முறையில் பொருட்கள் விநியோகித்தல் தொடர்பில் 87 முறைப்பாடுகளும், பதாகைகள் மற்றும் கட்அவுட்களை ஒட்டுதல் தொடர்பில் 24 முறைப்பாடுகளும், அரச சொத்துக்களை பயன்படுத்துதல் தொடர்பில் 20 முறைப்பாடுகளும், மற்றும் அரச ஊழியர்களை தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துதல் தொடர்பில் 06 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இது தவிர தேர்தல் சம்பந்தமாக பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கமைய தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. பொலிஸ் தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை காலப்பகுதியில் தாக்குதல்கள் மற்றும் வேட்பாளர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை தேர்தல் சட்டத்தினை மீறி பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்திய நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் முறைப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.