சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த இலங்கைப் பெண்ணொருவர் 18 வருடங்கள் அடைக்கப்பட்டிருந்து இன்று புதன்கிழமை காலை நாடு திரும்புகிறார்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டில் ரியாத்திலுள்ள தூதுவராலயம் மேற்கொண்ட முயற்சியினாலேயே ஆர். பேமவதி என்ற இந்தப் பெண்ணை விடுவிக்க முடிந்துள்ளது. குறித்த பணிப்பெண் அவர் வேலைசெய்த இடத்திலிருந்தே மீட்கப்பட்டாள்.
1999ல் மருதானையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒன்றின் ஊடாக பணிப்பெண்ணாகச் சென்ற குறித்த பெண் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகினார். அவரைப்பற்றிய எந்தவொரு தகவலும் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்தநிலையில் இந்த பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இவரைக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரளவின் உத்தரவின் பேரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இவரை இலங்கைக்கு அழைத்துவர சகல ஏற்பாடுகளையும் செய்தது.
அத்துடன் 18 வருடங்களுக்கான இவரது சம்பளத் தொகை 52,000 சவுதி ரியால்கள். இலங்கை பெறுமதியில் 18 லட்சம் ரூபா. இத்தொகையை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெறப்பட்டு இப்பெண்ணிடம் கையளிக்கப்படும் இதற்கான காசோலை இன்று புதன்கிழமை காலை அமைச்சரின் தலைமையில் குறித்த பெண்ணிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.