பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது, முப்படைகளையும் சேர்ந்த 18,500 பேர் சட்டரீதியாக விலகிக்கொண்டுள்ளனர் என்று, அவ்வமைச்சு அறிவித்துள்ளது.
இந்த 18,500 பேரில், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்ட பலதரப்புகளையும் சேர்ந்தோர் உள்ளனர் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம், ஜூன் மாதம் 13ஆம் திகதி முதல் ஒருமாத காலத்துக்கு அமுலில் இருந்தது.
இக்காலப்பகுதியில், இலங்கை தரைப்படையில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அடங்களாக 16ஆயிரத்து 920 பேரும், கடற்படையில் 831 பேரும் விமானப்படையில் 629பேரும் சட்டபூர்வமாக விலகிக்கொண்டனர்.
பொது மன்னிப்பு காலத்தின் போது, சரணடைந்த படையினரை கைதுசெய்யவோ அல்லது சிறைச்சாலையில் அடைப்பதற்கோ அல்லது அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவோ மாட்டாது. அவர்கள், படைகளிலிருந்து சட்டபூர்வமான முறையில் விலகிக்கொண்டதாகவே கணக்கிலெடுக்கப்படுவர் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.