Breaking
Fri. Jan 10th, 2025

இலங்கை அரசியல் சாசனத்தின் 19ஆவது சட்டத் திருத்தத்தின் சில பிரிவுகளை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்துவது, தேர்தல் நடைமுறையில் மாறுதல் கொண்டுவருவது உட்பட பல விஷயங்களை உள்ளடக்கிய அரசியல் சாசனத்தின் 19ஆவது திருத்ததை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் சமர்பித்தது.

.

அமைச்சரவையின் தலைவராக பிரதமர் செயல்படுவது, அமைச்சர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்குவது போன்ற சில அம்சங்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதலுக்கு அப்பாற்பட்டு சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயக் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
எனினும் உச்சநீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்பு தேவை எனக் கூறியுள்ள பிரிவுகளை அந்த சட்டத் திருத்தத்திலிருந்து நீக்கிவிட்டு, இதர பிரிவுகளை நிறைவேற்றலாம் என நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வகையில் 19ஆவது சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு அவையை கலைக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார்.

பொலநறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை அறிவித்தார்.

அரசு முன்னெடுத்துள்ள இந்தச் சட்டத் திருத்தம் எதிர்வரும் 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை காணப்படுகிறது என்றும் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பிறகு அந்த நிலை மாறும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related Post