Breaking
Thu. Dec 26th, 2024

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா?இல்லையா? என்பதை உறுதியாகக் கூறமுடியாது.ஆனால் 19 ஆவது திருத்தத்திற்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ சதிச்செயலில் ஈடுபட்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

இது தொடர்பாக கபீர் ஹாசிம் எம்.பி மேலும் தெளிவு படுத்துகையில்,100 நாட்களுக்குள் 19 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அதிகாரத்தை ஒழித்து பாராளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் பொறுப்புக்கூறும் ஜனாதிபதி முறைமையை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலை நிறுத்துவோம்.

17 ஆவது திருத்தத்திலிருந்த சுயாதீன ஆணைக்குழுக்களையும் நியமிப்போம் என்ற வாக்குறுதியை ஐ.தே கட்சி மக்களுக்கு வழங்கியது. அந்த வாக்குறுதிக்கு அமைய 19ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் எம்மால் முன்வைக்கப்பட்டது.இது தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்தி நிறைவேற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் 19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுப்படுவதை தடுப்பதற்கு பல்வேறு சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இனவாத ரீதியான பிரசாரங்களையும் முன்னெடுக்கின்றனர். இந்த சூழ்ச்சிகள் காரணமாய் 19 ஆவது திருத்தம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறுமா? அது நிறைவேற்றப்படுமா என்பது தொடர்பில் உறுதியாக கூறமுடியாத நிலமை தலை தூக்கியுள்ளது.எதிர்வரும் 20 ஆம் திகதி 19 ஆவது வருமா? வராதா? என்ற நிலை தோன்றியுள்ளது.

இந்த சதித்திட்டத்தினால் 19தை நிறைவேற்ற முடியாமல் போனால் பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு செல்வோம். இதனைத் தவிர ஐ.தே. கட்சிக்கு வேறு மாற்று வழியில்லை. மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை மீற முடியாது.மகிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் போட்டியிடுவது நல்லது. இது ஐ.தே.கட்சியின் வெற்றியை எதுவிதத்திலும் பாதிக்காது.

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் வீண் விரயங்கள் மற்றும் மக்களுக்கு கூறிய பொய்கள் அனைத்தும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவது நல்லதல்ல. ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தலில் நிராகரித்தது போலல்லாது அதற்கும் மேலதிகமான மக்கள் அவரை நிராகரிப்பார்கள். தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான யோசனையே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. எனவே இதில் திருத்தங்களை முன்வைக்க முடியும்.

தேர்தல் முறைமை மாற்றத்தின் போது தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர்களினது பாராளுமன்றம் பிரதி நிதித்துவம் பாதிக்காதவகையிலான  திருத்தங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் ஐ.தே.கட்சி கவனமாக உள்ளது. அதேவேளை |ஜே.வி.பி போன்ற சிறிய கட்சிகளும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் சிறிய கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளன.எனவே தேர்தல் முறைமை மாற்றம் சிறுபான்மை இன மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதாக இருக்க வேண்டும் அதனையே ஐதேகட்சி ஆதரிக்கும் என்றும் கபீர் ஹாசிம் எம்.பி தெரிவித்தார்.

-VK-

Related Post