-எம்.ஏ. எம். நிலாம்-
ஜனாதிபதியின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்த சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, அன்று 1959 பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டது போன்றதொரு முயற்சி இன்றும் காணப்படுவதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பாரிய கடப்பாட்டை மக்கள் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அண்மைக் காலமாக சில சக்திகள் ஜனாதிபதி செல்லுமிடங்களில் அவரை தொடர்கின்றன. இடையிடையே மறைமுகமான அச்சுறுத்தல்களும் எச்சரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன. தோற்றுப்போன சக்திகள் ஆத்திரமடைந்து தாங்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் பிதற்றித்திரிகின்றனர். ஊழல் , மோசடி நிறைந்த ஆட்சியை விரட்டியதன் பின் ஏற்பட்ட விளைவுகளே இவை. அன்று சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் காலை வாரிவிட்டவர்கள் ஆட்சித் தலைமையில் இருந்தவர்களே. நிறைவேற்று அதிகாரத்துக்கு வரும் எவரும் அந்த அதிகாரத்தை இழக்க ஒருபோதும் முன்வரமாட்டார்கள் என்று 38 வருடங்களுக்கு முன்னர் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ரணில் விக்கிரம சிங்கவிடம் தெரிவித்திருந்தார்.
கடந்த வருடம் வரை அந்த வாக்கு பொய்ப்பிக்கப்படவில்லை. 2015 ஜனவரி 8 இல் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன 100 நாட்கள் முடிவதற்குள் அதனைப் பொய்ப்பித்து விட்டார். மைத்திரி பால சிறிசேன இன்று மக்கள் தலைவராகியுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை அண்மைய சில சம்பவங்கள் மூலம் பகிரங்கமாகியுள்ளது. இந்த விடயத்தில் நாம் மிகவும் விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட துளியளவும் இடமளிக்கப்படக் கூடாது. 1959 இல் பிரதமராக இருந்த சுதந்திரக் கட்சித் தலைவர் பண்டார நாயக்கா சுட்டுக் கொல்லப்பட்டார். அதே சுதந்திரக் கட்சியின் தலைவராக இன்றைய ஜனாதிபதியும் காணப்படுகிறார்.
அதே அணியில் இருந்து தோற்கடிக்கப்பட்ட சக்திகளின் செயற்பாடுகள் குறித்து அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும். புனித பாப்பரசரால் மக்கள் தலைவர் எனவும் எளிமையான போக்குடையவரெனவும் பாராட்டப்படுபவர் எனது ஜனாதிபதி. உலகில் எத்தனையோ தலைவர்களைச் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் அனைவரையும்விட தன்னைப் போன்றதொரு தலைவராகவே மைத்திரி பால சிறிசேனவை காண்பதாகவும் பாப்பரசர் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறான ஒரு தலைவருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது. எமது உயிரைத் தியாகம் செய்தேனும் அவரைப் பாதுகாக்க வேண்டுமெனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.