முன்னாள் நண்பனால் கத்திமுனையில் பிடிபட்ட நிலையில் தன்னையும், தனது 2 குழந்தைகளும் அறிவு சாதுர்யத்தால் ஒரு பெண் காப்பாற்றிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஹைலேண்ட்ஸ் கவுண்ட்டியில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த அவரது முன்னாள் நண்பன், கத்தி முனையில் அந்தப் பெண்ணையும், அவரது 2 குழந்தைகளையும் சிறைபிடித்து, கடத்திச் செல்ல முயற்சித்தான்.
அவனிடம் இருந்து தப்பிக்க சாதுர்யமாக திட்டம் தீட்டிய அந்தப் பெண், ‘குழந்தைகள் பசியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பீட்சாவுக்கு ஆர்டர் தர அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். கடத்தல்காரனும் இதற்கு ஒப்புதல் தர, கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து, தங்களுக்கு வழக்கமாக பீட்சா டெலிவரி செய்யும் ’பீட்சா ஹட்’ கடைக்கு மளமளவென்று ஆர்டரை டைப் செய்தார்.
ஒரு கிளாசிக் பெப்பரோனி, ஒரு கார்லிக் பெப்பரோனி என 2 பிட்சாவுக்கு ஆர்டர் செய்த அவர், இடையில் ’நான் பிணைக்கைதியாக இருக்கிறேன், உதவி செய்யுங்கள்’ என்று ஓரிடத்திலும், ’911-க்கு (போலீசுக்கு) தகவல் அளித்து உதவுங்கள்’ என்று மற்றொரு இடத்திலும் டைப் செய்திருந்தார்.
இந்த பெண் தங்களது நிரந்தர வாடிக்கையாளர் என்பதால், இந்த ஆர்டர் ஏதோ விசித்திரமாக இருக்கின்றதே.., என யோசித்த பீட்சா ஹட் ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்து, அந்தப் பெண்ணின் வீட்டு விலாசத்தையும் தெரிவித்தனர். இதையடுத்து, விரைந்து சென்ற போலீசார், வீட்டினுள் குடிபோதையில் கத்தியுடன் அமர்ந்திருந்த அந்த முன்னாள் நண்பனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.