Breaking
Sun. Nov 24th, 2024

வீதிகளில் காட்டாறு கரைபுரண்டது
தலைகாட்ட விடாது பேய் மழை
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
30 வீடுகளின் கூரைகள்; அள்ளுண்டன

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையிலும் இருவர் மரணமடைந்துள்ளனர், நால்வரைக் காணவில்லை மற்றும் 1,871 குடும்பங்களைச் சேர்ந்த 7,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிவரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில், 3 வீடுகள் முழுமையாகவும் 13 வீடுகள் பகுதியளவிலும் பாதிப்படைந்துள்ளன. இதேவேளை, 97 குடும்பங்களைச் சேர்ந்த 422 பேர், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.

கேகாலை, தெஹியோவிட்டவில் இடம்பெற்ற மண்சரிவில் மூவர் காணாமல் போயுள்ளனர்.

வரட்சி, கடலரிப்பு, மண்சரிவு, வெள்ளம், மரம் விழுந்தமை, மின்னல் மற்றும் கடுங்காற்று ஆகிய அனர்த்தங்களினாலேயே இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பின் இயல்பு,  குறைந்த அழுத்த மண்டல வலயம் வரையிலும் வியாபித்தமையால், நாட்டில் ஏற்பட்டிருந்த சீரற்ற வானிலையின் நிலைமை, மிகமோசமாக மாறியது.
இந்த சீரற்ற வானிலையால், வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில், தாழ்நிலப்பகுதிகளும் தட்டாந்தரைகளும் வீதிகளும் வயல்நிலங்களும், வெள்ளத்தினால் மூழ்கின.

ஏனைய மாகாணங்களில், காட்டாறு வெள்ளம் கரைபுரண்டதுடன், மண்சரிவுகளும் ஏற்பட்டன. பாறைகள், வீதிகளில் புரண்டு விழுந்தன. இன்னும் சில இடங்களில், வீதிகள் தாழிறங்கின.

முழு நாட்டையும் உலுக்கியெடுக்கும் வகையில் பேய்மழை பெய்தது. மக்கள் வெளியில் தலைக்காட்ட விடாது, தொடர்ச்சியாக மழை பெய்தமையால், மக்களின் அன்றாட செயற்பாடுகளை முடக்கின.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் மாலை 5.30 வரையிலான காலப்பகுதிக்குள், அதிகூடிய மழைவீழ்ச்சியாக கட்டுநாயக்கவில் 137.7 மில்லிமீற்றரும், திருகோணமலையில், 125.7 மில்லிமீற்றரும், குருநாகலில் 117.2 மில்லிமீற்றரும் கொழும்பில் 106.9  மில்லிமீற்றரும் பதிவாகியுள்ளது.

குறைந்தளவான மழைவீழ்ச்சி யாழ்ப்பாணத்திலேயே பதிவாகியுள்ளது. அங்கு 1.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.

இதேவேளை, இன்று திங்கட்கிழமை, 150 மில்லிமீற்றர் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட தாழ்நிலப்பிரதேசங்களில், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துகொண்டமையால், மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர். சிலர், விடியவிடிய விழித்திருந்து வெள்ள நீரை வெளியேற்றிக்கொண்டிருந்தனர்.
நீரேந்தும் பிரதேசங்களில் அடைமழை பெய்தமையால், நீர்நிலைகளின் நீர்மட்டங்கள் உயர்ந்தன. இதனால், நீர்த்தேக்கங்கள் பலவற்றின் வான்கதவுகளும்; திறந்துவிடப்பட்டன.

ஆகையால், பிரதான நீர்த்தேக்கங்களுடன் இணைந்துள்ள ஆற்றங்கரைகளில் குடியிருப்போர், மிகமிக அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பதுளை, மொனராகலை, கண்டி, இரத்தினபுரி, குருநாகல், நுவரெலியா, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, புத்தல-கதிர்காமம் வீதியில், 21ஆவது மைல் கல்லுக்கு அருகில் வீதி உடைந்துள்ளமையால், கதிர்காமத்துக்குச் செல்லுவோர் மாற்றுவீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எல்ல-வெல்லவாய வீதியில், கற்கள் புரண்டு விழுகின்றமையால் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்து நிலையம் அறிவுறுத்தியுள்ளது. மன்னார்-புத்தளம் பழைய வீதி மூடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அண்மையில் நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தம், மட்டக்களப்புக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ளது. இதனால், நாட்டுக்குள்ளும் சுற்றியுள்ள கடற்பரப்பிலும் வானிலையில் மாற்றம் ஏற்படும். இந்நிலை தொடருமாயின் இன்று திங்கட்கிழமையும் அடைமழைபெய்யும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில், விசேடமாக வடக்கு கிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் கடுங்காற்று வீசும், இந்தத் தொகுதி மற்றும் செயற்பாடுகளினால், மேகத்தொகுதியில் மாற்றம் ஏற்பட்டு கடும் மழைபெய்யும். அதனோடு, மணிக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில், காற்றின் வேகம் அதிகரித்திருக்கும். ஆகையால், கடலலைகளின் உயரம் அதிகரித்து காணப்படும். கடற்படையினர் மற்றும் மீனவர்கள், மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாணந்துறையில் வீசிய கடும் காற்றின் காரணமாக 30 வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளுண்டன என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பிலுள்ள தேசிய நூதனசாலைக்கு முன்பாகவுள்ள மரமொன்றின் கிளை உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்ததினால், போக்குவரத்துப் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

Print

By

Related Post