Breaking
Mon. Dec 23rd, 2024

இருபதாம் திருத்தச்சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் அடுத்த வாரம் ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – 20 ஆம் திருத்தச்சட்டத்தை முன்வைப்பது தொடர்பில் எமக்கு 15 ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களை 255 ஆக உயர்த்தும் படி கிடைக்கப்பெற்ற ஆலோசனை முக்கியமானது. இவ் வேண்டுகோளானது எந்தவொரு அரசியல் கட்சியிடமோ அல்லது தனிநபரிடமிருந்தோ வந்த வேண்டுகோள் இல்லை. அதற்கு மாறாக பல சிறுபான்மை கட்சிகளுக்கும் சிறிய அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவளித்து இடமளிக்கும் முகமாகவே இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை மசோதாவானது அமைச்சரவை துணை குழுக்களின் தொகுக்கப்பட்ட அறிக்கையின் மூலமே தீர்மானிக்கப்படும். ஆகவே தான் பாராளுமன்றத்தில் தற்போதுள்ள 225 ஆசனங்களை 255 ஆக உயர்த்துவதற்கு ஆலோசனைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றுள்  165 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏக முறைமை அடிப்படையில் நியமிக்கப்பட்டனர் மற்றும்  எஞ்சிய பாராளுமன்ற உறுப்பினர்கள் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தேசிய பட்டியலில்  நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பாராளுமன்றில் மேலும் பரிந்துரைகளை அதிகரிப்பதன் மூலம் அதிக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக இறுதி வரைவு மசோதா கலந்துரையாடல் ஜனாதிபதி, பிரதமர், ஏனைய சிறுபான்மை கட்சிகள் மற்றும் பல்வேறு அமைச்சரவை பிரதிநிதிகள் ஆகியோருடன் இடம்பெற்று இறுதி மசோத அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற குழுவினருடன் சேர்ந்து இது சம்பந்தமாக தனியான ஒரு கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related Post