20ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிவில் சமுக பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்து ஐந்து மாதங்களாக இது குறித்து சுயாதீமான விவாதிக்கப்பட்டு வருகிறது. தமது 40 வருட அரசியல் வாழ்க்கையில், சட்ட மூலம் ஒன்று தொடர்பில் இந்த அளவு சுதந்திரமாக விவாதிக்க எந்த அரசாங்கமும் அனுமதி வழங்கியதில்லை.
18ம் திருத்தச் சட்டம் என்பது அமைச்சரவையில் கூட விவாதிக்கப்பட்டிருக்கவில்லை. சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொது மக்களும் அதன் உட்கிடக்கைகள் குறித்தே அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் தற்போதைய அரசாங்கம் இதற்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது.
எவ்வாறாயினும், இதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள் யார்? என்பது தொடர்பில் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
அத்துடன் நிறைவேற்ற முடியாமல் போனால், நாடாளுமன்றத்தை கலைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
இதேவேளை இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
அவர் உரையாற்றும் போது, தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்னும் இணக்கப்பாடு ஏற்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.