– ஏ.எஸ்.எம்.ஜாவித் –
இவ்வருட புனித ரமழானை முன்னிட்டு சவுதி அரேபிய அரசாங்கம் வழமைபோல் இலங்கையில் உள்ள நோன்பாளிகளுக்கு வழங்கவென சுமார் 200 மெற்றிக் தொன் பேரீத்தம் பழங்களை சவுதி அரேபியாவின் சல்மான் மனிதநேய மற்றும் மீட்சி நிலையத்தின் மூலம் இலவசமாக வழங்கியுள்ளது.
மேற்படிப் பேரீத்தம் பழங்களை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் அவரது காரியாலயத்தில் இன்று (11) இடம் பெற்றது.
பேரீத்தம் பழங்களை கையளிக்கும் நிகழ்வில் சவுதி அரேபியாவின் நிதியமைச்சின் அதிகாரிகளான அப்துல் அஸீஸ் அப்ரீஸ், அப்துல் மலிக் அல்ஹெஸான் ஆகியோரும் அவர்களின் ஏனைய அதிகாரிகளான ஹம்ட் அல்பாஸில், மொபர் அல் ஹம்டி ஆகியோரும், இலங்கைக்கான சவுதி அரேபியாவின் தூதரக பதில் தூதுவர் மம்ண்டு மொஹமடலி அல்லாப், தூதரகத்தின் ஊடக கவுன்சிலர் அலி, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார பிரதி அமைச்சர் டுலிப் விஜயசேகர, அமைச்சின் செயலாளர் திருமதி ஏ.எஸ்.எம்.எஸ். மகாநாம, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல், அமைச்சரின் பிரத்தியோகச் செயலாளர் எம்.எச்.எம். பாஹிம் திணைக்கள உதவிப்பணிப்பாளர் மௌலவி நூறுல் அமீன் உள்ளிட்ட அமைச்சினதும், திணைக்களத்தினதும் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இலவசமாக வழங்கப்பட்ட பேரீத்தம் பழங்களை பெறுவதற்கான ஆவணத்தில் அமைச்சர் கைச்சாத்திட்ட பின்னர் பேரீத்தம் பழங்களை சவுதி அரேபியாவின் நிதியமைச்சின் அதிகாரிகள் அமைச்சரிடம் கையளித்தபோது எடுக்கப்பட்ட படங்கள்.
கிடைக்கப்பெறும் பேரீத்தம் பழங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நோன்பாளிகளுக்கு நடாளாவிய ரீதியில் உள்ள பள்ளிவாசல்கள் மூலம் விரைவாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.