டைம்ஸ் பத்திரிகை (Time magazine) இவ்வருடத்துக்கான (2014) மிகச் சிறந்த நபர்களாக மேற்கு ஆப்பிரிக்காவில் தாம் ஓர் ஆட்கொல்லி நோயால் தொற்றப் பட்டு மரணமடைவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்ற போதும் தமது உயிரைப் பொருட் படுத்தாது எபோலா நோயால் பாதிக்கப் பட்ட ஆயிரக் கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அதனால் மரணித்த மேலும் இன்னமும் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து டாக்டர்கள் மற்றும் மருத்துவத் தாதியர்களையும் தேர்வு செய்து கௌரவப் படுத்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து டைம்ஸ் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் நான்சி கிப்ஸ் கூறுகையில், எபோலா என்பது ஓர் யுத்தம் மற்றும் ஏச்சரிக்கை போன்றது! இதை எதிர்த்து எல்லைகளற்ற மருத்துவர் (Doctors without borders) மற்றும் சமரிட்டன்ஸ் பேர்ஸ் என்ற இரு அமைப்புக்களையும் சேர்ந்த பல நூற்றுக் கணக்கான மருத்துவர்கள், மருத்துவத் தாதியர்கள், அம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் சவ அடக்கம் செய்யும் குழுவினர் தமது உயிரைத் துச்சமென மதித்து இந்த மனிதாபிமான சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இவர்கள் நிச்சயம் கௌரவிக்கத் தக்கவர்கள் என்றுள்ளார்.
உலக சுகாதாரத் தாபனமான WHO இன் அறிக்கையின்படி எபோலா நோயினால் இதுவரை 6300 பேர் வரை முக்கியமாக மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் கொல்லப் பட்டுள்ளனர். மேலும் கினியா, லிபேரியா, சியெர்ரா லெயோனே ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 000 பேருக்கு இந்நோய் பீடித்திருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளதுடன் இதில் 6000 பேரின் நிலை மோசமடைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதுவரை தடுப்பு மருந்தோ குணப்படுத்தும் மருந்தோ கண்டு பிடிக்கப் படாத எபோலா நோய்க்கு இதுவரை 400 இற்கும் அதிகமான மருத்துவர்களும், தாதியரும் ஏனைய மருத்துவக் குழுவினரும் பாதிக்கப் பட்டுள்ளதுடன் இதில் 230 பேருக்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ளதாகவும் உறுதிப் படுத்தப் பட்ட கணிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.
2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபருக்கான பட்டத்தைப் பெறும் இடத்திலுள்ள ஏனைய நபர்களில் ரஷ்ய அதிபர் புட்டின், ரோகெர் கூடெல், ஃபெர்குசன் புரட்சியாளர்கள், பாடகர் டாய்லொர் ஸ்விஃப்ட், சீன இணைய டைக்கூன் ஜக் மா, அப்பிள் நிறுவன CEO டிம் குக் மற்றும் ஈராக்கின் குர்துப் போராளிகள் தலைவர் மசௌட் பர்ஷானி ஆகியோர் உள்ளனர். இப்பட்டத்தைப் பெற டைம்ஸ் பத்திரிகையின் அதிகளவு இந்திய ஆன்லைன் வாசகர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களித்திருந்த போதும் இப்பத்திரிகை தேர்வு செய்யும் நபர் அதிகளவு செய்திகளைக் கவர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் மோடி இப்பட்டியலில் இருந்து நீக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 2013 ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் இன் மிகச் சிறந்த நபராக பாப்பரசர் ஃபிரான்சிஸ் தேர்வாகியிருந்தார் என்பதும் நினைவு கூரத்தக்கது.