2020ஆம் ஆண்டில் புகைப்பிடித்தலை முற்று முழுதாகத் தடை செய்ய சுகாதார சுதேச வைத்திய மற்றும் போசாக்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொழும்பு சுகாதார கல்விக் காரியாலயத்தில் நேற்று (15) நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் போது,சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
தொற்றா நோய்கள் இலங்கையில் துரித கதியில் அதிகரித்துள்ளது.இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகைப்பிடித்தலுக்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்றாத நோய்கள் பரவுவதற்கு காரணமாகிய புகைப்பிடித்தலை முற்றாக தடை செய்யும் இந்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதேவேளை, பொலனறுவை உள்ளிட்ட அரசாங்க வைத்தியசாலைகள் சிலவற்றில் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுகள் உருவாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நடைமுறைச் சாத்தியப்பாட்டுடன் இந்த புகைப்பிடித்தலுக்கான தடையை எவ்வாறு அமுல்படுத்துவது, அது வெற்றியளிக்கக் கூடிய சாத்தியம் உண்டா என்பது பற்றிய விளக்கத்தை பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.