Breaking
Sun. Dec 29th, 2024

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கூடுதல் விளையாட்டுகளாக, புதிதாக சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ள விளையாட்டுகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

அடுத்தகட்ட தேர்வுகள் நடைபெற்ற பிறகு எந்தெந்த விளையாட்டு அந்த ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் என்பது மேலும் தெளிவாகும்.

அவ்வகையில் தற்போது எட்டு விளையாட்டுகள் முதல்கட்டப் பரிசீலனையில் தேர்வாகியுள்ளன.

முதல்கட்ட பரிசீலனையில் பேஸ்பால்/சாஃப்ட்பால், பௌலிங், கராத்தே, ரோலர் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட் க்ளைம்பிங், ஸ்குவாஷ், சர்ஃபிங், வூஷூ ஆகிவை தேர்வாகியுள்ளன.

ஸ்னூக்கருக்கு இடமில்லை

அதேவேளை ஸ்னுக்கர் விளையாட்டு அடுத்த கட்டத்தை எட்டவில்லை.

ஸ்னூக்கர் விளையாட்டுக்கு உலகளவில் ரசிகர்கள் இருப்பதால் அந்த விளையாட்டு டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அதன் சர்வதேச சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஸ்னூக்கர் போலவே ஏர்ஸ்போர்ட்ஸ், அமெரிக்கன் ஃபுட்பால், சதுரங்கம், போலோ, சுமோ, நீருக்கு அடியில் இடம்பெறும் விளையாட்டு உட்பட 18 விளையாட்டுகள் அடுத்தகட்ட தேர்வுக்கு தகுதி பெறவில்லை.

தற்போது இரண்டாம் நிலை பரிசீலனைக்கு தேர்வாகியுள்ள எட்டு விளையாட்டுகளும் எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் தேதிக்கு முன்னர் கூடுதல் தகவல்களை டோக்யோ ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டுக் குழுவினருக்கு அளிக்க வேண்டும்.

அந்த ஏற்பாட்டுக் குழுவினர் அவர்கள் அளிக்கும் கூடுதல் விபரங்களை டோக்யோவில் ஆகஸ்ட் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் ஆய்வு செய்வார்கள்.

இறுதி முடிவு 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடுக்கப்படும்.

ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்கனவே ஜுடோ விளையாட்டு இடம்பெற்றுள்ள நிலையில், கராத்தே சேர்க்கப்பட வேண்டும் எனும் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

டோக்யோ கடந்த 1964ஆம் ஆண்டு முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியபோது காட்சி விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜூடோ 1972ஆம் ஆண்டு ம்யூனிக் நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தொடங்கி இடம்பெற்று வருகிறது.

-பி.பி.சி-


Related Post