Breaking
Mon. Dec 23rd, 2024

மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள், மன்னார்  அல்லது தற்போது வசிக்கும் பிரதேசங்களில் வாக்குப் பதிவினை கொண்டிராத நிலையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு, தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க  பதிலினை அனுப்பி வைத்துள்ளார்.

 

2020 ஆம் ஆண்டு தேர்தல் தேருநர் இடாப்பு மீளமைப்பு தொடர்பில், தேவைாயன தரவுகளை மன்னார் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலம் வழங்குமாறு தேர்தல் ஆணையாளர் வேண்டியுள்ளதுடன், இதனுடன் தொடர்புபட்ட ஆட்களை 2020 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பில் பதிவு செய்வதற்குப் பொருத்தமான முகவரி தொடர்பில் ஆராய்ந்து பார்க்க முடியுமென்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு,  அவர் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள், தமது வாக்குகள் எந்த மாவட்டத்திலும் பதிவு செய்யப்படாமல் இருப்பது தொடர்பில், தேர்தல் ஆணையகம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆணைக்குழுவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் முறைப்பாடு செய்திருந்தார்.

 

அதேவேளை, இவ்வாறு வாக்குப் பதிவுகள் இல்லாமல் இருக்கும் மக்களின் பதிவுகளை, உரிய  திகதிக்குள் மன்னார் உதவி தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பிக்கும் வகையில், தேர்தல் ஆணையகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்திற்கமைய, தகவல்களை உரிய முறையில் வழங்குவதற்கான உதவிகளை ‘வடக்கு இடம்பெயர் மக்கள்  அமைப்பு’ (NDPF ) முன்னெடுத்ததாக, அதன் தலைவர் எஸ்.எச்.அப்துல் மதீன் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், வாக்குகள் வெட்டப்பட்டும், இரு மாவட்டங்களில் ஏதாவது ஒரு மாவட்டத்திலும், தமது வாக்குப் பதிவுகளை கொண்டிராத மக்களின் விபரங்கள் தம்மிடம் இருந்தால், அதனை நேற்று 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு முன்பு, மன்னார் உதவி தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடத்தில்  வேண்டப்பட்டதற்கு அமைவாக, பொருத்தமான விண்ணப்பத்துக்கமைய கோரப்பட்ட விடயங்கள், மன்னார் தேர்தல் அலுவலகத்தில் நேற்றைய தினம் (2021.02.16) மாலை 4.00 மணிக்கு கையளிக்கப்பட்டதாக, பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

இதேவேளை, தொடர்ச்சியாக உரிமைக் கோரிக்கைகளுக்கான விசாரணைக் கடிதங்கள் தேருநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தங்களது வாக்குப் பதிவுகளை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில், பாதிக்கப்பட்ட வாக்காளர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து, உரிய தரப்புடன் கலந்துரையாடி, மேற்படி வேண்டுகோளினை அவர் முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post