-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் –
இப்போது உள்ள உயிரியல் சூழல் தொடர்ந்து வந்தால் 2050க்குள் பாதி உயிரினங்கள் பூமியிலிருந்து அழிந்து போய் விடும் என்று சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2030ம் ஆண்டுக்குள் நாம் 80 சதவீத எரிபொருள் சேவையை புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் மூலத்திற்கு மாற்றி விட வேண்டும். இப்போதிருந்தே இயற்கையைக் காக்கும் வேலையைத் தொடங்கி விட வேண்டும். அப்போதுதான் பூமி தப்பும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். இன்னும் 33 வருடங்களில் பூமியிலிருந்து 8 லட்சம் உயிரினங்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்று சூழலியல் நிபுணர் ரீஸ் ஹால்டர் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “மனிதர்கள் பூமியை மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு போய் விட்டனர். தற்போது நாம் புதிய பூகோள உலகுக்குள் நுழைந்துள்ளோம். இன்னும் பல கோடி ஆண்டுகளில் பூமி ஒரு பாறை போல மாறி விடும். இங்கு தாவரங்களும், உயிரினங்களும் பாசில்கள் போல மாறி விடும். இதை மாற்ற நாம் மிகப் பெரிய அளவில் இயற்கைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இனிமேல் வரும் காலத்தில் காலநிலை சரியான முறையில் இருக்காது. வெயில் காலத்தில் மழை வரலாம், மழைக் காலத்தில் வெயில் அடிக்கலாம். இதை மாற்ற முடியாது. இதற்குக் காரணம், நாம் அதிக அளவிலான கரியமில வாயுவை வெளியேற்றி வருவதால்தான். உணவுப் பாதுகாப்பும் இனி கேள்விக்குறியாகி விடும்.
நமது பூமியைச் சேர்ந்த பல உயிரினங்கள் தொடர்ந்து அழிந்து வருகின்றன. கடந்த 65 மில்லியன் ஆண்டுகளில் நாம் பல ஆயிரம் உயிரினங்களை இழந்துள்ளோம். இது தொடர்கிறது.
இதே வேகத்தில் போனால் அடுத்த 33 ஆண்டுகளில் நாம் 8 லட்சம் உயிரினங்களை இழக்க நேரிடும். அல்லது பூமியில் பாதி உயிரினங்கள் அழிந்து போகும் அபாயமும் உள்ளது. இதை சரி செய்ய வேண்டுமனால் நாம் இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்.
இப்போதிருந்தே இயற்கையைக் காப்பாற்ற வேண்டும். புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் மூலங்களுக்கு நாம் மாற வேண்டும். ஆனால் அதைத் தீவிரமாக செய்யத் தேவையான அரசியல் துணிச்சல் நம்முடைய எந்த நாட்டிலும் இல்லை.
இனி வரும் காலத்தில் பூமியில் வெப்ப நிலை அதிகரிக்கும். ஏற்கனவே அது வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது எல்லாமே விஷத்தன்மையாக மாறி விட்டது. உலகில் எங்கு பார்த்தாலும் ஆரோக்கியம் இல்லை. விஷத்தன்மைதான் மிகுந்துள்ளது. அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.