நாடளாவிய ரீதியில் நேற்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவுக்கு வந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்ததுடன் 26 பேர் காயமடைந்துள்ளனர். தம்புள்ளை, நாரம்மல, பன்னல, ஹுங்கம, கிரிஉல்ல மற்றும் புளத் சிங்கள ஆகிய பகுதிகளிலேயே இந்த விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று அதிகாலை தம்புள்ளை பொலிஸ் பிரிவின், தம்புள்ளை – கெக்கிராவை பிரதான வீதியின் மிரிஸ்கோணியாவ சந்தியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 26 பேர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த குறித்த அரை சொகுசு தனியார் பஸ் வண்டி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது பாதையை விட்டு விலகி லொறி ஒன்றுடனும் மரம் ஒன்றிலும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை நாரம்மல பிரதேசத்தில் இருந்து குளியாபிட்டிய நோக்கி பயணித்த தனியர் பஸ் ஒன்று அதற்கு முன்னால் சென்றுகொண்டிருந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியதில் அதில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.
பன்னல – குளியாபிட்டிய பிரதான வீதியின் பரகம்மன சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் வண்டி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதனைவிட மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியில் பாதையை கடக்க முயன்ற பாதசாரி ஒருவர் மோட்டார் கார் ஒன்றினால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஹுங்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கிரிஉல்ல பொலிஸ் பிரிவில் கிரி உல்ல – நாரம்மல பிரதான வீதியில் வேனொன்று முன்னால் சென்றுகொன்டிருந்த மோட்டர் சைக்கிள் மீது மோதியதில் துவிச் சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். நாரம்மல பிரதேசத்தில் இருந்து கிரி உல்ல நோக்கி பயணித்த வேனே இவ்வாறு முன்னால் பயணித்த துவிச் சக்கர வண்டியை மோதியுள்ளது.
இதனிடையே ஹொரனை – புளத்சிங்கள பிரதேசத்தின் கீழ் நாரங்கல பாலத்திற்கு அருகில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தின் சாரதியும், மேலும் இரண்டு பெண்களுமே சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.குறித்த பாரவூர்திக்கு முன்னால் வந்த முச்சக்கர வண்டிக்கு இடமளிப்பதற்காக பாரவூர்தி ஒதுங்கிய போது, அது பள்ளம் ஒன்றில் வீழ்ந்து இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.