Breaking
Tue. Dec 24th, 2024

 இர்ஷாத் றஹ்மத்துல்லா

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 25 வருடகாலமாக இயங்காமல் இருந்த ஒட்டுச் சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் முதற்கட்ட நிதி ஒதுக்கீடாக 20 மில்லியன் ரூபாய்களை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒதுக்கீடு செய்துள்ளார்.

தமது அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆராயும் கூட்டம் கொழும்பில் இடம் பெற்ற போது அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இலங்கையின் பழமையான தொழிற்பேட்டையில் ஒட்டுச் சுட்டான் தொழிற்சாலை மிகவும் பிரசித்தம் பெற்றதொன்றாக இருந்துவந்தது.

யுத்தகாலத்தில் இந்த தொழிற்சாலையின் செயற்பாடுகள் முற்றாக ஒடுக்கப்பட்டு இதனது ஊழியர்களும் தமது தொழிலினை இழக்கும் நிலையேற்பட்டது.அதே போல் இதனை நம்பி வாழ்ந்த பல குடும்பங்கள் தமது வருமானத்தை இழந்தன.

இந்த நிலையில் புதிய அரசாங்கத்தினால் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட நிறுவனங்களில் செரமிக் கூட்டுத்தாபனமும் ஒன்றாக இருந்ததினால்,இதன் கீழ் இந்த ஓட்டுச்சுட்டான் தொழிற்சாலையும் உள்ளீர்க்கப்பட்டிருந்தன.

ஆந்த வகையில் இதற்கு தேவையான இயந்திரங்களை தருவிக்கும் வகையிலும்,இந்த தொழிற்சாலையினை மீண்டும் புனரமைத்து பிரதேசத்தில் உள்ள 200க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நோக்கில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக இந்த தொழிற்சாலை புனரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு செரமிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு பணிப்புரையினை வழங்கியிருந்ததுடன்,100 நாள் வேலைத்திட்டத்தில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகளை மீள இயக்க வைப்பதற்கு நடவடிக்கையெடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இந்த அடிப்படையில்இந்த தொழிற்சாலையினை மீள ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

Related Post