மூதூர் கிழக்கு சம்பூர் போன்ற மீள்குடியேற்ற மக்களுக்கு சமுர்த்தி உணவு முத்திரை வழங்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் லாஹ் மஹ்ரூப் கோரிக்கை விடுத்தார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் (நேற்று) 21, திங்கட்கிழமை நடைபெற்ற போது இப்பிரச்சினையை முன்னிலைப்படுத்தி அவர் கருத்து தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, பாராளுமன்ற உறுப்பினார்களான அப்துல் லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக், கே. துரைரெத்தினசிங்கம், மாகாண அமைச்சர்களான சி. தண்டாயுதபாணி, ஆரியவதி கலப்பதி மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், படையினர், போலீசார் உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி. மேலும் கூறியதாவது,
சம்பூர், சேனையூர், பாட்டாளி புரம், பள்ளிக்குடியிருப்பு உள்ளிட்ட மூதூர் கிழக்கு மக்கள் கடந்த உள்நாட்டுப் போர் காலத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தனர். இதனால் இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரு கொடுப்பனவுகள் வழங்க முடியாது என்ற காரணத்துக்காக அவர்கள் பெற்ற சமுர்த்தி முத்திரை மீளபெறப்பட்டது என்றும் கூறினார். இப்போது இம்மக்கள் சமூர்த்தியும் இல்லை, வேறு நிவாரணமும் இல்லை. இதனால் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே, தற்போதைய சமுர்த்தி நிவாரண பயனாளிகளைக் குறைக்காது மேதிக சமுர்த்தி முத்திரைகள் பெற்று இம்மக்களுக்கு அவை வழங்கப்பட வேண்டும். என்றார்.