Breaking
Mon. Dec 23rd, 2024

இணையத்தள கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் நாடெங்கிலுமுள்ள சுமார் 2700 பாடசாலைகளில் இணையத்தளத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

பாடசாலை மாணவர்களுக்கான ‘ஸ்கூல் நெட்’ எனப்படும் சேவையினை கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனடிப்படையில் நாடெங்கிலுமுள்ள அரச பாடசாலைகளுக்கு இலவச இணையத்தள வசதியினை வழங்கியிருந்தது. மேலும் இணையத்தள வசதிக்காக ஒவ்வொரு பாடசாலையும் மாதாந்தம் 7 ஆயிரம் ரூபா முதல் 9 ஆயிரம் ரூபா வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொகை அதிகமானதெனவும், பாடசாலைகளுக்கான இணைய வசதிகளுக்கான சில கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், மாதாந்தம் 1,500 ரூபாவே நியாயமான கட்டணம் எனவும் அண்மையில் கல்வியமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் குறித்த கட்டணத்துக்கு அமைவாக புதிய ஒப்பந்தமொன்று செய்துகொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் மாதாந்தம் 7,000 ரூபா தொடக்கம் 9,000 ரூபா வரையான கட்டணம் செலுத்துவதற்காக செய்யப்பட்டிருந்த பழைய

ஒப்பந்தம் மோசடியானது எனவும், அது தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வியமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும் அதற்கான விசாரணைகளும் இதுவரைக்காலப்பகுதியிலும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் தற்போது இணையத்தள வசதிகள் துண்டிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் இந்த இணையத்தளத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் இலட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, இவ்விடயத்தில் கல்வியமைச்சு உடனடியாக தலையிட்டு உரிய தீர்வுகளை வழங்க அவசர வேண்டுகோளொன்றை விடுக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post