மண்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களாக 7 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள், கடும் ஆபத்தான நிலைமையில் உள்ளன என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மலைகள் கொண்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள், இயற்கைக்கு மாறாக நிலத்தில் வெடிப்புகள் மற்றும் நீரோட்டங்கள் ஏற்படுவதைக் கண்டால், அவை தொடர்பில் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய அதேவேளை, அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு, மேற்படி நிறுவனத்தின் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிக்குழுவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்தார்.
இந்நிலையில், கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை, புளத்கொஹுபிட்டிய, கேகாலை, வரக்காபொல, றம்புக்கணை மற்றும் கலிகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மலைப் பகுதிகள், மண்சரிவு அபாயத்துக்குட்பட்ட பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட அயகம, எஹெலியகொடை, கிரிஎல்ல, இரத்தினபுரி, பலாங்கொடை, குருவிட்ட, கலவானை, நிவித்திகலை, பெல்மடுலை, எலபாத, ஓப்பநாயக்க, கஹாவத்தை, இம்புல்பே உள்ளிட்ட மலைகள் காணப்படக்கூடிய பிரதேசங்களும் மண்சரிவு அபாயத்துக்குட்பட்ட பிரதேசங்கள் என பெயரிடப்பட்டு, பதுளை மாவட்டத்தின் 2,518 இடங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.