ஓகியோவில் உள்ள லோரைன் பகுதியில் 4 வயது சிறுவன் தனது 3 வயது தங்கையை துப்பாக்கியால் தலையில் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளீவ்லாந்தில் இருந்து 48 கி.மீ மேற்கில் உள்ள லோரைன் பகுதியில் இருந்த வீடு ஒன்றில் 4 வயது சிறுவனும் அவரது 3 வயது தங்கையும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சிறுவனுக்கு கைத்துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளது.
தன்னிடம் இருந்த .40 கேலிபர் கைத்துப்பாக்கியை கொண்டு தங்கையை விளையாட்டாக மிரட்டிய சிறுவன் எதிர்பாராத விதமாக சிறுமியின் தலையில் சுட்டார். படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்விளைவுகள் தெரியாமல் தங்கையை விளையாட்டாக சுட்ட சிறுவன் அழுதபடியே இருந்ததாகவும், காவல் துறை அதிகாரி ஒருவரிடம் தான் செய்த செயலுக்காக ‘சாரி’ சொல்லி மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.