மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 30 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த ஒருவரை கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் 1986ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் இந்த நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்த பின்னர், இந்த நபர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருந்ததுடன், மீண்டும் நாடு திரும்பி புறக்கோட்டை மெனிங் சந்தையில் காய்கறி வர்த்தம் செய்து வந்துள்ளார்.
இவர் குறித்து கிடைத்த முறைப்பாடு ஒன்றை அடுத்து, அவரை தாம் கைது செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபர் நேற்று புதுக்கடை இலக்கம் 4 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை நாளைய தினம் மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
60 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.