உலகின் மிகவும் பரபரப்பான இரண்டாவது விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகின்றது.இந்த பெருமை மட்டும் போதாது என்று தீர்மானித்த துபாய் அரசு, இந்த விமான நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ’துபாய் வேர்ல்ட் சென்ட்ரல்’ பகுதியில் மற்றோரு சர்வதேச விமான நிலையத்தை புதிதாக கட்ட ஏற்பாடு செய்து வருகின்றது.
32 பில்லியன் (3200 கோடி) அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்படும் இந்த விமான நிலையத்தை சுமார் நான்கரை கிலோ மீட்டர் நீளமுள்ள 5 ஓடுபாதைகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.2020-ம் ஆண்டு வாக்கில் 120 மில்லியன் பயணிகளையும், 12 மில்லியன் டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டதாகவும், சுமார் 200 விமானங்களை ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கும் வகையிலும் உருவாகவுள்ள இந்த புதிய விமான நிலையம், உலகின் மிகப் பெரியதும், அதிநவீன வசதிகள் கொண்டதாகவும் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதுள்ள சர்வதேச விமான நிலையத்தை 7.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் விரிவுப்படுத்தும் பணிகளும் விரைவில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.