பொலிஸ் மா அதிபர் பதவிக்கு புதியவரை நியமிக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்ட மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களினதும் தகைமைகளை பரீட்சித்துப் பார்க்க அரசியலமைப்புசபை தீர்மானித்துள்ளது.
அதன்படிசிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான எஸ்.எம்.விக்ரமசிங்க, பூஜித்த ஜயசுந்தர,சந்தன விக்ரமரத்ன ஆகியோர் இன்று (18) பாராளுமன்ற வளாகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அரசியலமைப்பு சபை பாராளுமன்றில் கூடவுள்ள நிலையில் புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்யும் பணி இடம்பெறவுள்ளது.
இந் நிலையிலேயே பதில் பொலிஸ் மா அதிபர், விஷேட நிலைமைகள், பிரபுக்கள் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க,
மேல் மாகாணத்துக்க்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர,
தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன
ஆகியோரை இன்று பாராளுமன்றுக்கு அழைத்துள்ளதாக பாராளுமன்ற அலுவலர்களின் பிரதானியான நீல் இத்தகவலை தெரிவித்தார்.
இந் நிலையில் இன்றைய தினம் அரசியலமைப்பு சபைக்கு அழைக்கப்பட்டுள்ள குறித்த மூன்று பிரதிப் பொலிஸ் மா அதிபர்களினதும், சிரேஷ்டத்துவத்துக்கு மேலதிகமாக, அவர்களது சேவைக் காலம், சேவைக் காலத்தில் செய்த விஷேட பணிகள் உள்ளிட்டவை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அரசியமைப்பு சபை தகவல்கள் தெரிவித்தன.
இன்றைய தினம் அரசியலமைப்பு சபையினால் தெரிவு செய்யப்படும் புதிய பொலிஸ் மா அதிபரின் பெயர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.