முஸ்லிம் குடியேற்றங்கள் வில்பத்து வன எல்லைக்கு வெளியிலேயே இடம்பெற்றுள்ளன. அத்துமீறிய குடியேற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், முன்னாள் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஏ.எஸ்.எம்.நௌபல், கடந்த 30 வருட காலமாக வில்பத்து கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பாரியளவில் காடழிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து சுற்றாடல்துறை அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டுகொள்வதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், காடழிப்புகளும் வன ஆக்கிரமிப்பும் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவில்லை. வில்பத்து வனப்பகுதியின் கிழக்கு, தெற்கு எல்லைக்குட்பட்ட அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்ட பகுதிகளிலேயே பாரியளவில் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வில்பத்து வன பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் திட்டமிட்ட இனவாத ரீதியிலான பிரசாரங்கள் முன்னெடுத்து வரும் நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 30 வருட காலமாக வில்பத்து வனப்பகுதியில் பாரியளவில் காடழிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக வில்பத்து சரணாலயத்தின் கிழக்கு எல்லை பகுதியான அனுராதபுர மாவட்டத்தில் கூடுதலாக காடழிப்பு நடந்தேறியுள்ளது.
வில்பத்து வனப்பகுதி எல்லையிலுள்ள தன்சிறி மலையினூடாக ஊடறுத்து பிரதான வனப்பகுதிக்குள் பாரிய அத்துமீறல்களும் காடழிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், மோதரகம் வெவ எனப்படும் இடத்திலும் மோதரகம் ஆற்றுப் பகுதியிலும் காடழிப்பு நடந்துள்ளது. இது வில்பத்து சரணாலயத்திற்கான பிரதான முக்கியம் வாய்ந்த வடிகால் பகுதிகளில் ஒன்றாகும். இப்பகுதியில் முழுமையாக காடழிப்பு செய்யப்பட்டு சேனைப் பயிர்செய்கை உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு, கிழக்கு எல்லைப்பகுதியில் முழுமையாக ஊடுநுவப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளையும் தாண்டி வனப்பகுதிகளுக்குள்ளும் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளன. வன விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அதற்கு ஆதாரமாக அநுராதபுர மாவட்டத்திலுள்ள வில்பத்து வன எல்லைப்பகுதிகளில் வனவிலங்கு இறைச்சி விற்கும் இடங்கள் அதிகரித்துள்ளன.
இதுதவிர புத்தளம் மாவட்ட எல்லைக்குள் உள்ள வில்பத்துவின் தெற்கு பகுதியிலும் காடழிப்புகள் பாரியளவில் இடம்பெற்றுள்ளன. பொதுவாக வனப்பகுதியிலிருந்து 1 கிலோ மீற்றர் தொலைவு வரை வன எல்லைகளாக கணிக்கப்படும். ஆனாலும், இங்கு வனபாதுகாப்பு எல்லைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு, ஜயபூமி, சுவர்ணபூமி என்ற பெயர்களில் பத்திரங்களும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன. அரச ஆதரவுடனே அங்கு காடழிப்புகள் இடம்பெற்றிருக்கிறதா என்று சந்தேகங்கள் எழுகின்றன. சில பகுதிகளில் மரம் வெட்டுவதற்காக பிரதேச செயலாளர்களினால் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அவை சிங்கள கிராமங்களாகவே இருக்கின்றன. அங்கு சிங்கள அதிகாரிகளே இருக்கின்றனர். இதனால், இந்த விடயம் பிரச்சினையாக்கப்படவில்லை.
தப்போவ என்ற வனவிலங்கு சரணாலயப் பகுதியில் பாரியளவில் காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அது முஸ்லிம் அல்லாதவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையால் பூதாகரமாக்கப்படுவதில்லை. இவ்வாறான காடழிப்புகள், ஆக்கிரமிப்புகள் மற்றும் அத்துமீறல்கள் குறித்து ஜனாதிபதி அறியாமலிருக்க வாய்ப்பில்லை. சுற்றாடல் துறை அமைச்சை பொறுப்பேற்றிருக்கும் அவர் இவ்விடயத்தை கண்டுகொள்ளாதிருப்பது ஆச்சரியமளிக்கிறது. மன்னார் மாவட்டம் வில்பத்து எல்லைக்குள் உட்படாது. ஆனாலும், அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றத்தின் பின்னர் புதிதாக காடுகள் உருவாகியிருக்கின்றன. எனினும் அது மக்கள் வாழ்ந்த பூர்வீக பகுதிகளாகும்.
மறிச்சிக்கட்டி, கொண்டச்சி, கரடிக்குளம் உள்ளிட்ட பகுதிகள் வில்பத்து வன பாதுகாப்பு எல்லையிலிருந்து 10 மைல் தொலைவிலேயே இருக்கின்றன. இவை எந்தவகையிலும் வில்பத்து சரணாலயத்திற்கு உட்படாது. அந்தப் பகுதியில் 30 வருடத்திற்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான அத்தாட்சிகள் இருக்கின்றன. எனினும் இன்னும் அவை மக்களுக்கு புனரமைத்து கையளிக்கப்படவில்லை.
சிலாவத்துறை – புத்தளம் பிரதான வீதியில் மீள்குடியேற்றப்பட்டிருப்பது முஸ்லிம் குடியேற்றங்கள் மட்டுமல்ல, இரு தமிழ் கிராமங்களும் 80 வீடுகள் கொண்ட சிங்கள குடியிருப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இதை யாரும் கண்டுகொள்வதாக தெரிவதில்லை.
எனவே, இனவாதரீதியில் திட்டமிட்டே இன்று பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் அரசியல் நோக்கங்களும் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli-