Breaking
Fri. Nov 22nd, 2024

இன்று எமது சமூகத்திலே பலர் இந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகி வருகின்றனர், இந்த பரீட்சையானது உண்மையிலே எதற்கு.. ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த சிறுவர்களை நாம் தயார் படுத்துகின்றோம் என ஒவ்வொரு பெற்றோரும் சற்று யோசியுங்கள். இந்த பரீட்சையில் சித்தியடைந்தால் என்ன, சித்தியடையாவிட்டால் என்ன நடக்க போகிறது.. என்பதை சற்று தனியாக இருந்து கொஞ்சம் யோசியுங்கள்.

உங்களுக்கு தேவை அதிக புள்ளிகளா ?

அல்லது நல்ல உடல் உள ஆரோக்கியமான பிள்ளையா?

உங்களுக்கு தேவை அதிக புள்ளிகளா ?

அல்லது அதிக வில்லைகளா (Tablets)

உங்களுக்கு தேவை அதிக புள்ளிகளா ?

அல்லது பாடசாலை செல்லமருக்கின்ற பிள்ளைகளா?

காரணம் என்னவென்றால் … ஒவ்வொரு வருடங்களும் உளவியல் பாதிப்பு அடையும் குழந்தைகளின் வீதம் அதிகரித்துவருகின்றது.

குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு ஏற்படுகின்றது போல பெற்றோருக்கும் பல உளவியல் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.

சில உதாரணங்கள் :

அதிக நேரம் பாத் ரூமில் இருத்தல், அதி கூடிய கோபம், ஏனைய பிள்ளைகளுக்கும் அடித்தல், கெட்ட வார்த்தையால் திட்டுதல், அடிக்கடி எண்ணங்கள் மாறுதல் (Mood Swing), எரிச்சல், மன உளச்சல், கணவருடன் அடிக்கடி சண்டை பிடித்தல், மூட்டு வலி, தலை வலி, இதன் விளைவாக அடிக்கடி பனடோல் பாவித்தல். இவ்வாறு இந்த பெற்றோர்கள் குழந்தைகளை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என ஆசைப்படுகின்றவர்கள், சிறு வயதிலேயே நோய் வாய்ப்பட்டு விடுகின்றனர். இறுதியிலே குழந்தைகள் அனாதைகளாக ஆகி விடுகின்றனர்.

பெற்றோர்களின் நிறைவேறாத கல்வி ஆசையினை – தனது பிள்ளை செய்ய வேண்டும் என நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.

இந்த பரீட்சையில் சிலர் சித்தியடைந்தாலும், பலர் சித்தியடையாமல் போகின்றனர் , சித்தியடைந்தவர்களுக்கு பல பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்படுவதனால், சித்தியடையாதவர்கள் உளவியல் பாதிப்புக்கு உட்படுகின்றனர்.

ஆகவே இது தேவையா? சரி சித்தியடையாத மாணவர்களுக்கு சித்தியடைய வைப்பதற்கு ஏதாவது செயல் திட்டங்கள் எங்காவது உள்ளதா? இல்லவே இல்லை.

அதுமட்டுமல்லாமல் இந்த பரீட்சைக்கு சீசன் வியாபாரிகள் போல வரும் சில ஆசிரியர்கள்.

ஒரு நாள் கருத்தரங்கு கட்டணம், 3 நாள் கட்டணம், பேப்பர் கிளாஸ் கட்டணம், ModelPapers கட்டணம் என மாணவர்களையும் , ஏழ்மையான பெற்றோரையும் மிக கஷ்டத்திற்கு இட்டு செல்கின்றனர்.

மேலும் இந்த ஆசிரியர்கள் மாணவர்களை பின்வரும் உளவியல் தாக்கத்திற்கு உட்படுத்துகின்றனர். அதிகாலையிலும் இரவிலும் பல மணித்தியாலங்கள் படிக்க வேண்டும், எனக்கு miss call பண்ணுவதன் மூலம் அதனை உறுதிசெய்ய வேண்டும்.

நான் தயாரித்த மாதிரி வினாத்தாளை நீ செய்ய வேண்டும், அதில் நீ குறைந்த புள்ளிகளை பெற்றால், உனக்கு பரீட்சை எழுத முடியாது !. இவ்வாறு பல பொறி முறைகளை வைத்து இவர்களை நோயாளிகளாக மாற்றுகின்றனர்.

உங்களிடத்தில ஒரு கேள்வி ?

இவ்வளவு வருடங்களாக இந்த பரீட்சையினை எழுதி சிறந்த முறையில் சித்தி பெற்றவர்கள் இந்த நாட்டில் எவராவது எதாவது ஒரு சாதனையை படைத்திருக்கிறார்களா? ஒன்றும் இல்லை.

இந்த பரீட்சையினால் உளவியல் பாதிக்கப்பட்டவர்களும், தற்கொலை செய்தவர்களுமே அதிகம் எனலாம்.

ஒரு எழுத்து பரீட்சை மூலம் ஒருநாளும் ஒரு குழந்தையின் திறமையினை எடை போட முடியாது. முதலில் இந்த பரீட்சை மையக் கல்வி முறை மாற்றப்படல் வேண்டும், இதன் விளைவாகத்தான் தொடர்ந்தும் எமது மாணவர்கள் மருத்துவராகவும், பொறியியலாளர்களாகவும், சட்டத்தரணிகளாகவும், ஆசிரியர்களாகவும், வருகிறார்களே தவிர எம்மால் கண்டுப்பிடிப்பாளர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்க முடியாமல் இருக்கிறது.

வெளிநாடுகளிலே இந்த பரீட்சை முறை மாற்றப்பட்டு, கற்பதற்கு ஆர்வமான பல புதிய யுக்திகள் பயன்பட்டு வருகின்றன. இந்த பரீட்சை முறையினால் ஏற்படும் பிரச்சினைகளாவன – மாணவர்களுக்கு இடையே போட்டி, பொறமை , வஞ்சகம், மன அழுத்தம், பரீட்சை பயம் (Exam Phobia), பாடசாலை இடை விலகல், போன்ற இன்னும் பல உள்ளன .

உலகத்தில் சாதனை படைத்தவர்கள் அதிகம் படிக்காதவர்கள் தான் !

மேலும் நான் சாதித்து காட்டுவேன் என்ற ஒரு வெறி வருமேயானால் !

அதுதான் அந்த மாற்றம் அந்த எழுச்சி.

இந்த ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலை, மாணவர்களுக்கு படித்துக்கொடுப்பது அல்ல, அவர்களுக்கு படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவர்களுக்கும் வெவ்வேறு திறமைகளே இருக்கின்றன.

அந்த திறமைகளை கண்டறிந்து அதனை கூர்மையாக்க வேண்டும், இவ்வாறு செய்தால் தான் நமது நாட்டில் பல புதிய கண்டுப்பிடிப்பாளர்களையும், விஞ்ஞானிகளையும், பல துறைசார்ந்தவர்களையும் உருவாக்கலாம்.

ஆக மொத்தத்திலே, உங்கள் பிள்ளைகளுக்கு ஓரளவான பயிற்ச்சிகளை மட்டும் கொடுங்கள். அந்த மாணவருக்கு படிப்பில் வெறுப்பு வராதவாறு பார்த்துக்கொள்ளுங்கள், ஒரே படி படி என கூறாதீர்கள், ஏன் படிக்க வேண்டும் என்பதை விளக்கி கூறுங்கள், தொடர்ச்சியாக Tuition வகுப்புகளுக்கு அனுப்பாமல், ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலங்கள் கட்டாயமாக அவர்களுக்கு ஓய்வு கொடுங்கள், அல்லது அவர்களின் பொழுது போக்கிற்கு இடம் அளியுங்கள். அடிக்கடி பாடசாலைகளை மற்றாதீர்கள் – காரணம் நல்ல நண்பர்களின் நல்ல ஆசிரியர்களின் பிரிவு கூட ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பாடசாலைகளையோ, ஆசிரியர்களையோ நம்புவதை விட்டு விட்டு உங்கள் குழந்தைகளை நம்புங்கள். அவர்கள் ஒழுங்காக படிக்கவில்லை என்றால் எங்கு பிரச்சினை உள்ளது என்பதை கண்டு பிடியுங்கள். இன்று நம்மில் பல உளவியல் ஆலோசகர்கள் உள்ளனர், அவர்களை நாடி தீர்வை பெறுங்கள். ஒவ்வொரு பாடசாலைக்கும் கட்டாயமாக ஒரு உள வள ஆலோசகர் இருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். உங்கள் குடும்பத்தில் ஒருவரை உளவியல் துறையில் படிக்கவையுங்கள். காரணம் இதனால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பல நன்மைகள் உள்ளன. ஒவ்வொரு ஆசிரியர்களும் கட்டாயமாக உளவியல் பாட நெறியினை கற்றுக்கொள்ளுங்கள்.

தந்தைமார்களே ! உங்களது குழந்தைகளோடு குறைந்தது ஒரு நாளைக்கு 2 மணித்தியாலங்கள் செலவிடுங்கள். இதனால் பாடசாலையில் கிடைக்காத பல திறமைகளை அவர்கள் பெறுவார்கள்.

அவர்களை பல இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நிதானமாக பதில் கூறுங்கள். பொய் பதில்களை கூறி அவர்களையும் பொய்யர்களாக உருவாக்காதீர்கள். உங்களுக்கு தெரியாவிட்டால் -தெரியாது என்று கூறுங்கள். அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டு கூறுவதாக கூறுங்கள். சிறு பிள்ளைகளுக்கு முன்னால் சண்டை பிடிக்காதீர்கள். உங்களது வாத பிரதிவாதங்களை அவர்கள் இல்லாத நேரத்தில் கதையுங்கள்.

புத்திமதிகளையும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் அவ்வப்போது கூறுங்கள். அன்போடும் பண்போடும் நடந்து கொள்ளுங்கள். அவர்களை மற்றவர்களின் முன்னாள் ஒருநாளும் அவமானம் படுத்தாதீர்கள், அவர்களின் மனது (Mind) ஒரு கண்ணாடி போன்றது , உடைந்தால் ஓட்டுவது மிகக்கடினம்.

படிப்பை மாத்திரம் கொடுக்காமல் குழந்தைகளுக்கு விளையாட்டிலும் சேர்த்துவிடுங்கள், காரணம் விளையாட்டு தான் ஒரு குழந்தையின் ஆளுமை, துணிச்சல், பொறுமை, தோல்வியை தாங்கிக்கொள்ளும் மன நிலை,முடிவெடுக்கும் தன்மை (Decision Making), புத்தாக்கத்திறன் (Creativity) போன்ற பல திறன்களை உருவாக்குகின்றது.

By

Related Post