Breaking
Mon. Dec 23rd, 2024

-எம்.எப்.எம்.பஸீர் –

கடந்த  2008 ஆம் ஆண்டு தெஹிவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்ட ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரில் மாணவர்கள் அனைவரும் உயிருடனேயே உள்ளதாக, பாதிக்கப்பட்டோரின் உறவுகளுக்கு  வைபர் ஊடாக செய்தி அனுப்பட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.  கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவில் சவூதி அரேபியாவில் உள்ள உறவினர் ஒருவர் ஊடாக தாம் இந்த செய்தியை அறிந்துகொண்டதாக கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திடம் தெரிவித்தார்.

ஐந்து மாணவர் கடத்தல் விவகாரம் தொடர்பிலான வழக்கு இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் வழக்கு முடிந்து வெளியே வந்த போதே குறித்த பெற்றோர் இதனைத் தெரிவித்தனர். அதனால் தமது பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக தாம் உறுதியாக நம்புவதாகவும் அவசரமாக அவர்களை  மீட்டுத் தந்தால் போதுமானது எனவும்   அப்பெற்றோர் உருக்கமாக  தெரிவித்தனர்.

ராஜீவ் நாகநாதன் , பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் இராமலிங்கம் ஆகியோருடன் மொஹமெட் சஜித், மொஹமட் டிலான் ஆகிய ஐந்து மணவர்கள் உள்ளிட்ட 11 பேர் 2008 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தலை நகரின் பல பிரதேசங்களில் இருந்தும்  கடத்தப்பட்டு   முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டதாக  சந்தேகிக்கபப்டுகிறது.

எனினும் அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து எவ்வித தகவல்களும் இது வரை இல்லை. இந் நிலையிலேயே  கடந்த 10 ஆம் திகதி இரவு வைபர் ஊடாக ராஜீவ் நாகநாதன் என்ற கடத்தப்பட்ட மாணவனின் தாய்க்கு வைபர் ஊடாக அவரது மகன் உள்ளிட்ட ஐவரும் உயிருடன் இருக்கும் செய்தி அனுப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.

இதனைவிட குறித்த ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் திருகோண மலையில் இருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அது  இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்ரனர். இந் நிலையில் அவர்களை மீட்டுத் தருமாறும் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரை வீரகேசரி இணையத்தளம்  தொடர்புகொன்டு வினவியது. எனினும் இது குறித்து தமக்கு எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை என குறிப்பிட்ட அந்த அதிகாரி சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை  செய்து வருவதாக குறிப்பிட்டார்.

By

Related Post