-ரெ.கிறிஷ்ணகாந் –
மாவனல்ல கங்துன பிரதேச பாடசாலை ஒன்றில் ஆறாம் தரத்தில் கற்றுவ ரும் மாணவர்கள் சிலர், தமது வகுப்புக்கு புதிதாக வந்த மாணவியை பல்கலைக்கழக பாணியில் பகிடிவதை மேற்கொண்டமைக்காக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஆறாம் தரத்துக்கு புதிதாக வந்த மாணவி ஒருவர் அணிந்திருந்த சீருடையை, அங்கிருந்த மாணவர்கள் சிலர் இரண்டாக கத்தரித்து விட்டு, பின்னர் மாணவர்கள் மத்தி யில் நடந்துவருமாறு பணித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த மாணவி இது தொடர்பில் பாடசாலையின் அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அதன்பின்னர் பகிடிவதை புரிந்த மாணவர்களிடம் அதிபர் விசாரணைகளை மேற்கொண்டபோது, ‘நாம் பல்கலைக்கு சென்றால் இவ்வாறு மேற்கொள்ளவேண்டி ஏற்படும் எனவே அதற்காக நாம் இப்போதிருந்தே பயிற்சிகளை பெற்று தயாராகி வருகின்றோம்” என தெரிவித்ததாக அதிபர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த வகுப்பில் கற்கும் மாணவியொருவர் தெரிவித்த போது, தனது மூத்த சகோதரி பல்கலைக்கழகத்தில் கற்று வருவதாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட இவ் வகையான பகிடிவதை தொடர்பாக வீட்டில் உரையாடிக் கொண்டிருந்தபோது அது போன்று தாமும் செய்து பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவி தமது பெற்றோரிடம், தான் பாடசாலை செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இச் சம்பவத்தின் பின்னர் குறித்த ஆறாம் தரத்தின் மாணவர்களை வரவழைத்த அதிபர், தமது பிள்ளை செயற்பட்ட விதம் தொடர்பில் தெரிவித்து மாணவர்களையும் எச்சரித்துள்ளதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.