Breaking
Fri. Nov 15th, 2024

இலங்கையின் 08ஆவது பாராளுமன்றம் நாளை கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் டபிள்யு.பி.டி. தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் தெரிவுக்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன வரிசைகள் நிரந்தரமாக உறுதி செய்யப்படுமென்றும் அவர் கூறினார்.

நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு இலங்கையின் 08வது பாராளுமன்றத்தின் சம்பிரதாய அமர்வு ஆரம்பமாகும். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுபாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் அன்றையதினம் காலை கூடி சபாநாயகரை தெரிவு செய்வர்.

சபாநாயகர் பதவிக்காக ஒரு பெயர் சிபாரிசு செய்யப்படுமாயின் அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார். ஆனால் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் தேவையேற்படின் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படலாமென்றும் செயலாளர் நாயகம் தசநாயக்க கூறினார்.

சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்வர்.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர்களைக் தெரிவு செய்வார். தேவையேற்படின் இதற்காக இரகசிய வாக்கெடுப்பொன்று நடத்தப்படலாமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பின்னர் சபை அமர்வு பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்படும். 03 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வைபவரீதியான அமர்வு ஆரம்பமாகும். இதில் ஜனாதிபதி, நாட்டுத் தலைவரென்ற வகையில் கொள்கை விளக்க உரையாற்றுவார்.

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி யுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிரேஷ்ட அரசியல்வாதி என்ற வகையில் அவருக்கு சபையின் முதல்வரிசையில் ஆசன ஒதுக்கீடு வழங்குவதற்கான வாய்ப்பு அதிகமென்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமான தசநாயக்க கூறினார்.

-Tkn-

Related Post