நாட்டில் காணப்படும் H1 N1 இன்புளுவென்ஸா வைரஸ் தொற்றுக் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் 8 கர்ப்பிணித் தாய்மார்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் தொற்றுக் காரணமாக தென்மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கராப்பிட்டிய மற்றும் பலப்பிட்டிய பகுதியிலேயே இரண்டு கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் சிரேஷ்ட பதிவாளர் டொக்டர் அத்துல லியனபத்திரன தெரிவித்தார். ஹம்பாந் தோட்டை, காலி, தர்காடவுன், கேகாலை, மட்டக்களப்பு மற்றும் களுபோவில ஆகிய இடங்களில் மேலும் ஆறு கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் 19 மாவட்டங்களில் 130 எச்1என்1 இன்புளுவென்ஸா வைரஸ் தொற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கூடுதலானவர்கள் வயதுவந்தவர்கள் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த வயதானவர்கள் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகவும் டொக்டர் லியனபத்திரன தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்றுக்கு உள்ளானவுடன் சிகிச்சைபெறத் தவறியமையே உயிரிழப் புக்களுக்குக் காரணம் என்றும், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் கொண்ட கர்ப்பிணித் தாய்மார்கள் உடனடியாக சிகிச்சை பெறுவதுடன், 2 வயதுக்குக் குறைந்த மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட குறித்த நோய்க்கான அறிகுறி கொண்டவர்கள் 48 மணித்தியாலங்களுக்குள் வைத்தியரை நாடவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களில் பலருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், இந்நோய்த் தொற்றை தடுப்பதற்கு தென்கொரிய அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. தென்கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு இந்நோய்த் தொற்றுத் தொடர்பில் அறிவூட்டப்பட்டிருப்பதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
எச்1என்1 இன்புளுவென்ஸா வைரஸ் தொற்று வெளிநாடுகளிலிருந்து இங்கு பரவுவதற்கான ஆபத்து பெரியளவில் இல்லையெனக் குறிப்பிட்டிருக்கும் சுகாதார அமைச்சு, 2012ஆம் ஆண்டு இந்நோய் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகம் பரவியபோதும் இலங்கையில் இந்நோய்த் தொற்று அதிகமாகக் காணப்பட்டிருக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளது.