பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் கோப் குழு தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு அதன் முன்னாள் தலைவர் டி.யு.குணசேகர மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிகாரம் இல்லாத போது ஊடக சந்திப்பு நடத்தி எவ்வித சட்ட ஆவணம், அறிக்கை இன்றி டி.யு.குணசேகர மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் கருத்து வெளியிட்டதாக சிறிகொத்தவில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
இதன்மூலம் பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 22ம் சரத்துபடி டி.யு.குணசேகர பாராளுமன்ற சிறப்புரிமையை மீறியுள்ளதாக பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
மத்திய வங்கி ஆளுநர் மீது சுமத்தப்பட்டுள்ள பிணை முறி குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமித்ததாகவும் அந்த குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதாகவும் அதனால் குழு தொடர்பில் பிரச்சினை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இது தொடர்பில் ஆராய கோப் உப குழு அமைக்கப்பட்டதாகவும் அந்த உப குழுவில் சாட்சி அளிக்க தான் தயார் என கூறியபோதும் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இங்கிலாந்தில் இவ்வாறான ´நியூஸ்கொப்´ சம்பவத்தில் அந்நாட்டு பிரதமர் மற்றும் உரிய அமைச்சர்கள் இவ்வாறு சாட்சி அளிக்க அழைக்கப்பட்டதாகவும் அதனையே இலங்கையிலும் செயற்படுத்தக் கூறியதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஆனால் தனக்கு அப்படி ஒரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும் கோப் உப குழு நடத்திய விசாரணையில் அறிக்கை பாராளுமன்றில் சமர்பிக்கப்படாது சபாநாயகருக்கு சமர்பிக்கப்படாது உள்ள நிலையில் டி.யு.குணசேகர ஊடக சந்திப்பு நடத்தி கருத்து வெளியிட்டமை மிகப்பெரிய ஊழல் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இவ்வாறு பாரிய மோசடியில் ஈடுபட்ட டி.யு.குணசேகரவுடன் இது தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்க பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தயார் எனவும் தொலைக்காட்சி ஒன்றில் இந்த விவாதம் நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.