Breaking
Sun. Dec 22nd, 2024

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் இராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு பாதை அமைக்கும் திட்டத்தை இந்திய  மத்திய அரசு  ஆரம்பிக்கவுள்ளது.

22 ஆயிரம் கோடி ரூபா செலவில் அமையும் இந்த திட்டத்தின் கீழ், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையும் கடலுக்கு மேல் பாலமும் அமைக்கப்படவுள்ளது. டில்லியில் நேற்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து தொடர்பான  மாநாட்டு இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய கப்பல் மற்றும் வீதி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்டை நாடுகளுடன் வர்த்தக ரீதியான உறவை பலப்படுத்த போக்குவரத்து இணைப்பு வசதி முக்கியமானதாக கருதப்படுகிறது. பங்களாதேஷ், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளையடுத்து  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சாலை அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்காக 22 ஆயிரம் கோடி ரூபாவை கையளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது.
இது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த சாலை 22 கிலோ மீற்றர்  தூரத்துக்கு அமையலாம்.

கடலுக்கு மேல் பாலம் அமைத்தும் கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்தும் இந்த சாலை திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகள் மூலமாக 50 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஆறு இலட்சம் கோடி ரூபா செலவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த இலக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் எட்டப்படும். சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளில் ஏற்கனவே ஒரு இலட்சம் கோடி ரூபா மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என நிதின் கட்கரி மேலும் தெரிவித்தார்.

Related Post