இந்திய, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாவலரை, வெளிநாட்டுப் பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வந்திருந்தார்.
அப்போது நுழைவு வாயிலில் இருந்த பாதுகாவலர், அந்த பெண்ணை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட நபர்களையே அனுமதிக்க முடியும் என அவர் கூறி விட்டார். அவர் டெல்லி காவல்துறை சார்பில் மன்மோகன் சிங்கிற்கு பாதுகாவலராக நியமிக்கப்பட்டவர்.
இதைத்தொடர்ந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண், கோபத்துடன் திடீரென பாதுகாவலரின் கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
அந்த பெண் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. எனினும் அந்த பெண் யார் என்ற உறுதியானக தகவல் வெளியாகவில்லை.