கடந்த ஆண்டு அளுத்கமவில் நடைபெற்ற இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இது குறித்து அரசு விஷேட கவனம் செலுத்தவேண்டுமென முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் வேண்டுகோள் விடுத்தார்.
அளுத்கம அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் தெஹிவளையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பிரதம அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டார். இலங்கை இராணுவத்தின் மேற்குப் பிராந்தியத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவெல இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து பேசிய அல்ஹாஜ் அமீன் கூறியதாவது, கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் இந்நாட்டு மக்கள் மிகவும் பீதியோடு வாழ்ந்தார்கள்.அளுத்கமவில் நடைபெற்ற அனர்த்தம் காரணமாக முஸ்லிம்களுக்கு பெரும்அழிவு ஏற்பட்டது. குறுகிய காலத்துக்குள் சேதத்துக்குள்ளான வீடுகளையும், கடமைகளையும் நிர்மாணித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது பாராட்டுக்குரியது.
மேஜர் ஜெனரல் உபய மெதவெலதலைமையில் இப்பணிகள் சிறப்பாக நடைபெற்றன. அதற்காக நாம் அவருக்கு முஸ்லிம் சமூகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆனால் பாதிக்கப்பட்மக்களுக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இது குறித்து நீதியமைச்சர் விஷேட கவனம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.
இலங்கை இராணுவத்திலும், பொலிஸ் படையிலும் மிகக் குறைவான முஸ்லிம்களே இருக்கிறார்கள். கடந்த காலங்களில் இராணுவத்தில் பணிபுரிந்த முஸ்லிம்களை சிறப்பாக தமது பங்களிப்பைச் செய்தார்கள். மேஜர் லாபிர், மேஜர் முத்தலிப் போன்ற பல முஸ்லிம்கள் யுத்தத்தில் நாட்டுக்காக இரத்தத்தைச் சிந்தியிருக்கிறார்கள். இப்போது படைகளிலோ பொலிஸ் சேவையிலோ குறைந்த முஸ்லிம்களே இருக்கிறார்கள். இந்நிலையை மாற்ற விஷேட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொழும்பு தெற்கில் முஸ்லிம் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுவதற்கு ஒரு பாடசாலை இல்லை.
முஸ்லிம்கள் தம் பிள்ளைகளை சிங்களப் பாடசாலைகளில் சேர்க்க முற்பட்டாலும் அதற்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை. கொழும்பு மத்தியிலிருந்து பாணந்துறை வரை ஒரு ஆண் பாடசாலை இல்லை. இக்குறையை நிவர்த்தி செய்ய கௌரவ அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.