மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த போது சுனாமி அனர்த்தம் காரணமா வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் போர்வையில் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையை இரத்துச் செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குருணாகலில் இன்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவியதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு நடத்தும் விசாரணைகளின் பின்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குடியுரிமை இரத்தாகும் எனக் கூறியதாகவும் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கும் போது சோதிடர்களின் ஆலோசனைப்படி மகிந்த தேர்தலை நடத்தினார். நாடாளுமன்ற உறுப்பினராக, பிரதியமைச்சராக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, பிரதமராக, ஜனாதிபதியாக பதவி வகித்து விட்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக முயற்சித்து வருகிறார்.
ஜனாதிபதி பதவி இல்லாமல் போனதும் பிரதமர் பதவிக்கு வர முயற்சிக்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ராஜபக்ச அணியினரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். சிரமத்துடன் அதனை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்து வருகிறார்.
மகிந்த ராஜக்சவிடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டுமாயின் வெற்றிலைக்கு எதிராக வாக்களியுங்கள் என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.