Breaking
Mon. Dec 23rd, 2024
– ஏ.எச்.எம் பூமுதீன் –
பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொருட்டு தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் நாளை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார்.
நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமையும் அம்பாறை மாவட்டத்தில் முகாமிட்டிருக்கும் தலைவர் ரிசாத் பதியுதீன் தனது தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை மருதமுனையிலிருந்து தனது சூராவளி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ரிசாத் பதியுதீன் நிந்தவூர், பொத்துவில் மற்றும் சம்மாந்துறை  ஆகிய முஸ்லிம் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து கட்சிக் காரியாலயங்களை திறந்து வைக்கவுள்ளார்.
அத்துடன் அனைத்துப் பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் பொதுநல அமைப்புக்களை சந்தித்து கட்சி தொடர்பான விளக்கங்களை கூறி ஆதரவினை திரட்டவுள்ளார்.
நாளை சனிக்கிழமை மாலை பொத்துவிலில் இடம்பெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ள அமைச்சர் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணிக்கு சம்மாந்துறையில் இடம்பெறும் பொதுக் கூட்டத்திலும் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
மறுநாள் காலை இறக்காமம் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்யும் அமைச்சர் இவ்விரு ஊர்களிலும் உள்ள கட்சிக் காரியாலயங்களை திறந்து வைத்து பொதுக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ளார்
முன்பகல் மாளிகைக்காட்டுக்கு விஜயம் செய்யும் தலைவர் கட்சிக் காரியாலத்தை திறந்து வைப்பதுடன் அதன் பின்னர் வேட்பாளர் சிராஸ் மீராசாஹிபின் இல்லத்தில் இடம்பெறும் பல்வேறு பொதுநல அமைப்புக்களுடன் உரையாடவுள்ளார்.
அன்றைய தினம் மாலை சாய்ந்தமருதில் இடம்பெறும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள அமைச்சர் அக்கரைப்பற்று, அட்டாளைச் சேனை பிரதேசங்களுக்கு விஜயம் செய்து கட்சிக்காரியாலயங்களை திறந்து வைத்து பொதுக்கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்.
அதன்பின்னர் ஒலுவில் ,நற்பிட்டி முனை போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்து இறுதியாக கல்முனை நகரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றவுள்ளார்.
மேற்படியான அமைச்சரின் அம்பாறை விஜயத்திற்கான அட்டவணைக்கு அப்பால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முகா, சுகா மற்றும் ஐதேக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளுராட்சி மன்ற  உறுப்பினர்கள் மற்றும் சிரேஸ்ட அரசியல் பிரமுகர்கள் உத்தியோகபூர்வமாக தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் முன்னிலையில் அ.இ.ம.கா வில் இணைந்து கொண்டு கட்சியின் இரண்டு ஆசனம் என்ற இலக்கை நோக்கிய பயணத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளனர்.
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் நாளைய அம்பாறை விஜயத்தினையொட்டி முஸ்லிம் கிராமங்கள் எங்கும் அ.இ.ம.கா வேட்பாளர்களின் சுவரொட்டிகளும் அமைச்சரை வரவேற்கும் பதாகைகளும் அமைச்சரின் தனிப்படம் தாங்கிய சுவரொட்டிகளும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.கா தனித்து களமிறங்கியுள்ளமை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் அரசியல் அலையையும் ஏற்படுத்திருக்கும் மறுபக்கம் முகாவுக்கு பாரிய வீழ்ச்சியை தோற்றிவித்துள்ளதாக அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பகுதிகளில் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Post